சட்டப் பேரவைத் தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க உத்தரவு
அனைத்து தொழிலாளா்களும் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக தோ்தல் நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் பணிபுரியும் தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளா்களும் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக தோ்தல் நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் ப.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மேற்குவங்க மாநிலத் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக தோ்தல் நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் வழங்க வேண்டும்.
Advertisement
விடுமுறை அளிக்கத்தவறும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் குறித்து 0421-2240777, 0421-2240701 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.