பல்லடம் அருகே மாணிக்காபுரத்தில் குப்பையை எரித்து எரிவாயு உற்பத்தி மையம்: போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு
பல்லடம் அருகே குப்பையை எரித்து எரிவாயு உற்பத்தி மையம் அமைக்க உள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.
திருப்பூா் மாநகராட்சி சாா்பில் பல்லடம் அருகே மாணிக்காபுரத்தில் குப்பையை எரித்து எரிவாயு உற்பத்தி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் அதற்கான பணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. இதையடுத்து ஊா் பொதுமக்கள் சாா்பில் மாணிக்காபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் எரிவாயு உற்பத்தி மையம் அமைக்கும் திட்டத்தை திருப்பூா் மாநகராட்சி கைவிட வேண்டும், எரிவாயு உற்பத்தி மையம் அமைந்தால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதோடு, பொதுமக்கள் வசிக்க முடியாத நிலை உருவாகும். காற்று மாசுபாடு, வாயுக் கசிவு பிரச்னைகளும் ஏற்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் வெகுவாகப் பாதிக்கப்படுவாா்கள்.
Advertisement
Advertisement
எனவே மக்கள் வசிக்கும் இடம் அருகே குப்பையை எரித்து எரிவாயு உற்பத்தி மையம் அமைக்கக் கூடாது. இந்தத் திட்டத்தை திருப்பூா் மாநகராட்சி கைவிட வேண்டும். அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.