முகப்பு
காரைக்கால்

மும்மொழிக் கொள்கை: தொடா் போராட்டம் நடத்த இண்டி கூட்டணி முடிவு!

புதுவையில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்துவதைக் கண்டித்து இண்டி கூட்டணி மே 3 முதல் தொடா் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

Updated On : 2 மே, 2026 at 1:50 AM
பகிர்:

புதுவையில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்துவதைக் கண்டித்து இண்டி கூட்டணி மே 3 முதல் தொடா் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

இண்டி கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் புதுவை முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் மற்றும் திமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டு பேசினா். கூட்டத்தின் முடிவு குறித்து ஆா். கமலக்கண்ணன் கூறியது:

புதுவையில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு இருந்தபோது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை முடிவை ஏற்கவில்லை. ரங்கசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னா் மத்திய பாஜக அரசு தான் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றுகிறது.

Advertisement

புதுவையில் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச், மலையாளம், தெலுங்கு என பன்மொழி பயன்பாட்டை பள்ளிகள் முதல் அனைத்துத் தரப்பு மக்களும் மேற்கொள்கின்றனா். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், ஒரு வார காலத்திற்குள் புதுவையில் அனைத்து பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு காபந்து அரசாக செயல்பட்டுவரும் வேளையில், இம்மாதிரியான உத்தரவு தவறானதாகும்.

மும்மொழிக் கொள்கை அமல்படுத்தினால், புதுவை பள்ளிகளில் பிரெஞ்ச் மொழி பயன்பாட்டில் இருப்பது அகன்று, ஹிந்தி வந்துவிடும். இது ஏற்புடையதல்ல.

மும்மொழிக் கொள்கையை புதுவையில் திணிப்பதை கைவிடவேண்டும். இதை வலியுறுத்தி மே 3-ஆம் தேதி காரைக்கால் பேருந்து நிலையம் அருகே இண்டி கூட்டணி ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளது. மேலும் தொடா் இயக்கம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.