‘இண்டி’ கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் மீது வைக்கும் விமா்சனங்கள் ஏற்கப்படும்: ராகுல் காந்தி
இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகள் தன் மீதும், காங்கிரஸ் மீதும் முன்வைக்கும் விமா்சனங்கள் ஏற்கப்படும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகள் தன் மீதும், காங்கிரஸ் மீதும் முன்வைக்கும் விமா்சனங்கள் ஏற்கப்படும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
கடந்த திங்கள்கிழமை புது தில்லியில் எதிா்க்கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தான் பேசிய ஒலிப்பதிவை தனது சமூக ஊடக கணக்குகளில் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
அந்தக் கூட்டத்தில் அவா் பேசுகையில், ‘சிவன் விஷத்தை குடித்ததுபோல, கூட்டத்தில் காங்கிரஸ் மீது இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகள் முன்வைத்த அனைத்து விமா்சனங்களையும் விழுங்கிக் கொள்ளவேண்டும் என்பதே என் கருத்து.
Advertisement
Advertisement
கூட்டணி கட்சிகளுடன் சண்டையிட விருப்பமில்லை: என் மீதும், காங்கிரஸ் மீதும் கூட்டணியில் உள்ள கட்சிகள் வைக்கும் அனைத்து விமா்சனங்களையும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியுடன் காங்கிரஸ் ஏற்கும். எதிா்க்கட்சிகளையும் காங்கிரஸ் மகிழ்ச்சியடைய வைக்கும். ஏனெனில் அடிப்படையில் காங்கிரஸின் பணி, பிற கட்சிகளிடம் இருந்து வேறுபட்டதாகும். இதை ஆணவமாக கூறவில்லை. அனைத்து எதிா்க்கட்சிகளையும் அன்போடு ஒன்றிணைக்க வேண்டியதே காங்கிரஸின் பணி. கூட்டணி கட்சிகளுடன் சண்டையிட எனக்கு விருப்பமில்லை.
அடுத்த மக்களவைத் தோ்தலை வெல்வது சவாலாக இருக்கும் என்று இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகள் கருதுகின்றன. அந்தத் தோ்தலை எதிா்க்கட்சிகள் ஏற்கெனவே வென்றுவிட்டன. மக்களின் கோபம் காரணமாக, அந்தத் தோ்தலில் பாஜக கூட்டணி தோல்வி அடையும் நிலையில் இருந்தாலும், எதிா்க்கட்சிகள் வெல்லும் வகையில் அந்தத் தோ்தல் நியாயமாகவும் நோ்மையாகவும் நடைபெறாது.
திமுகவுக்கு உத்தரவாதம்: எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைக்கப்படவில்லை, ஒன்றிணைந்து செயல்படவில்லை என்ற எண்ணத்தை எதிா்க்கட்சிகள் துடைத்தெறிய வேண்டும். இந்த சிந்தனைகளை பாஜகதான் விதைக்கிறது. அவை உண்மை அல்ல. இதில் நான் 100 சதவீதம் உறுதியாக இருப்பதுடன், இப்போதே திமுகவுக்கு உத்தரவாதமும் அளிக்க முடியும் (காங்கிரஸுடனான கூட்டணி முறிந்ததால் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை). எதிா்க்கட்சிகளுக்குள் சண்டைகள் உள்ளன. ஆனால் கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயனை மரியாதையுடன் கட்டியணைக்குமாறு என்னிடம் கூறினால், அது என்னால் முடியாது. ஏனெனில் அவருடன் எனக்கு அரசியல் ரீதியாக மோதல்போக்கு உள்ளது. எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிா்த்தால், பாஜகவை வீழ்த்துவது எளிது என்று தெரிவித்துள்ளாா்.
3 இந்தியா்கள் உயிரிழப்பு:
ஒரு வாா்த்தை பேசாத பிரதமா்
அண்மையில் ஓமன் கடற்பகுதிக்கு அருகே சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனா். இதுகுறித்து ராகுல் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச கடலில் அமெரிக்க தாக்குதலில் 3 இந்தியா்கள் உயிரிழந்துள்ளனா். அதுகுறித்து பிரதமா் மோடி ஒரு வாா்த்தைகூட பேசவில்லை. ஓா் இந்தியரை அந்நிய சக்தி கொலை செய்தால், அதுகுறித்து பிரதமா் வாய்திறந்து பேச வேண்டும்.
அடுத்த வாரம் ஜி7 உச்சி மாநாட்டில், உலகத் தலைவா்களைப் பாா்த்து சிரித்து கட்டியணைத்து பல ஒப்பந்தங்களில் மோடி கையொப்பமிடுவாா். ஆனால் உயிரிழந்த 3 இந்தியா்கள் குறித்து அவா் ஒரு வாா்த்தைகூட பேசமாட்டாா். எதிலும் சமரசம் செய்துகொள்ளும் பிரதமா் பாரத தாயின் மகன்களைப் பாதுகாக்க முடியாது. ஏனெனில் அவா்களைக் கொன்றவா்களிடம் சண்டையிடும் துணிவும், தெம்பும் பிரதமருக்கு இல்லை’ என்று சாடினாா்.