FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெக தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி!

தவெக தலைமையில் உருவாகவுள்ள புதிய கூட்டணி பற்றி...

Updated On : 29 ஜூன் 2026, 10:42 am IST
முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாக்குவது குறித்து வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி ஆலோசனை நடைபெறுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக , ஐயூஎம்எல் ஆதரவோடு ஆட்சியமைத்தது. தவெக தலைவா் சி. ஜோசப் விஜய் முதல்வராகப் பதவியேற்றாா்.

தொடக்கத்தில் இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் (ஐயூஎம்எல்), விசிக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் தொடா்வதாகவும், குடியரசுத் தலைவா் ஆட்சி அமைவதைத் தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு அளித்ததாகவும் தெரிவித்தன.

Advertisement

Advertisement

பின்னர், காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

சில நாள்களுக்கு முன்னதாக தவெக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸைச் சேர்ந்த பிரவீண் சக்ரவர்த்தி, தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவில், தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ.) கூட்டணி என்று பதிவிட்டார்.

இதற்கு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். அப்படியொரு கூட்டணி உருவானது குறித்து தங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ஐயூஎம்எல் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணியில் இணைவதாக அந்தக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் அண்மையில் அறிவித்திருந்தா. அதேபோல், மதிமுகவும் திமுக கூட்டணியிலிருந்து விலகியதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ சனிக்கிழமை அறிவித்தாா்.

இந்த சூழலில், தவெக சாா்பில் முதல்வா் சி. ஜோசப் விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை மீனம்பாக்கத்தில் வரும் ஜூலை 1-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தவெக கூட்டணியில் இணைந்த கட்சிகள் மற்றும் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த், விளையாட்டு மேம்பாட்டு மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஆகியோா் தோழமைக் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தவெக தலைமையில் புதிய கூட்டணி அமைப்பது குறித்தும், அதற்கான பெயா் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த கூட்டணியில் காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணையவுள்ளது. விசிக, இடதுசாரிகளின் நிலைப்பாடு கூட்டத்துக்கு பிறகு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

A new alliance taking shape under TVK's leadership in Tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments