'இண்டி' கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இணைந்துள்ளது குறித்து...
'இண்டி' கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இணைந்துள்ளது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
நன்றிக் கடன்
'பகைவனுக்குப் பகைவன் எனது நண்பன்' என்பது போலத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். தேசியக் கட்சியான பாஜக தமிழ்நாட்டில் பெரிய அளவில் வளர்ச்சி அடைய முடியவில்லை. எனவே, காங்கிரஸýடன் கூட்டணி என்பதுதான் இருக்கும் ஒரே வாய்ப்பு. இப்போது நடைபெற்று வரும் தவெக ஆட்சி தனிப் பெரும்பான்மை ஆட்சி அல்ல. இந்த ஆட்சி அமைவதற்கு காங்கிரஸ்தான் அஸ்திவாரம் போட்டது என்பது எல்லாரும் அறிந்ததே. தவெக என்ற கொடி வளர்வதற்கு கொழுகொம்பாக இருப்பது காங்கிரஸ்தான். இந்த நிலையில், தனது ஆட்சியை ஸ்திரப்படுத்தவும், காங்கிரஸýக்கு நன்றிக் கடன் செலுத்தவும் 'இண்டி' கூட்டணியில் தவெக இணைந்ததே சரி.
எஸ். வேணுகோபால், சென்னை.
Advertisement
Advertisement
சரியான முடிவு
மத்தியில் ஒரே கட்சியின் ஆதிக்கத்தை ஒழித்து, பிராந்திய கட்சிகளின் குரல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு 'இண்டி' கூட்டணியில் தவெக இணைந்தது வரவேற்கத்தக்கது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், 'இண்டி' கூட்டணியும் மட்டுமே தேசிய அளவில் இரு பெரும் கூட்டணியாக தேர்தல் களத்தில் உள்ளன. தனிக்கட்சி ஆட்சி என்பது கனவாகிப்போன காலகட்டத்தில் மாநிலக் கட்சிகளின் துணையுடன்தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்பது நிதர்சனம். எனவே, வரக்கூடிய தேர்தல்கள் அனைத்தையும் கருத்தில் வைத்து 'இண்டி' கூட்டணியில் தவெக இணைந்தது சரியான முடிவாகும்.
என்.வி. சீனிவாசண், புது பெருங்களத்தூர்.
தற்காலிகம்
பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கை நியதி; அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை. இது தற்காலிகம்தான்; ஆனாலும் வேறுவழியில்லை. கூட்டணி அமைத்து, தான் மட்டுமே பலனை அனுபவித்த கட்சியைவிட்டு கூட்டணி மூலம், கூட்டு பலனை அனுபவிக்க வித்திட்ட தவெகவை 'இண்டி' கூட்டணியில் சேர்த்தது ஏற்புடையதே. கொள்கை வேறுபாட்டால் திமுக வெளியேறிய நிலையில், தவெக சேர்ந்துள்ளது. ஆனால், கட்சித் தொண்டர்கள் விஜய்தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்பதை முன்னெடுக்கும் நிலையில், ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்ற நிலைதான் வரும்.
டி. சேகரன், மதுரை.
புல்லா, மரமா?
யார் எங்கே இருக்கிறார்கள்? என்பது முக்கியமல்ல; எப்படி இருக்கிறார்கள்?, எப்படிச் செயல்படுகிறார்கள்? என்பதுதான் முக்கியம். வெற்றிக்கு ஒரு மதிப்பு உண்டு. ஆனால், வெற்றியே எல்லாவற்றையும் தந்து விடாது. விவேகமும், வினையாற்றும் திறனும்தான் நிலையான இடத்தைப் பெற்றுத் தரும். பொதுவாக, பெரியவர்கள்தான் சிறியவர்களைப் பயன்படுத்துவார்கள். விதிவிலக்குகளும் உண்டென்றாலும், அரசமரத்தடியில் புல் முளைக்கப் போகிறதா, இல்லை அரச மரமே முளைக்கப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தவெக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் விதத்தில்தான் அதன் வெற்றி உள்ளது.
மு. சிதம்பர வில்வநாதன், சென்னை.
தெளிவு வேண்டும்
தவெக அரசாள ஆதரவு தந்த கட்சிகள் 'இண்டி' கூட்டணியில் இருப்பதும், முக்கியமாக மத்தியில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் தலைமையில் 'இண்டி' கூட்டணி செயல்படுவதும் தவெகவை அந்தக் கூட்டணியை நோக்கி நகர்த்தி இருக்கிறது. மேலும், பாஜக எதிர்ப்பு என்பது இவை அனைத்துக்கும் பொதுவானது. அதேவேளை, மத்திய அரசை எப்போது எதிர்க்க வேண்டும்?, எப்போது ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்? என்ற தெளிவு ஆளும் மாநில அரசுக்குத் தேவை. இத்துடன் கொள்கை ரீதியான தெளிவும் வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் தனது உண்மையான நிலைப்பாட்டை தவெக வெளிப்படுத்த வேண்டும்.
தே.ச. மங்கை, திருநெல்வேலி.
கொள்கை முக்கியம்
பிரதமர் வேட்பாளராக விஜய் போட்டியிடுவதை எந்த ஒரு காங்கிரஸ்காரரும் ஏற்றுக் கொள்ளமாட்டார். முந்தைய 'இண்டி' கூட்டணி வலுவாக இருந்ததற்கு ராகுல் காந்திக்கும் ஸ்டாலினுக்கும் இடையே இருந்த சகோதர உணர்வுதான் முக்கிய காரணம். அது போன்ற பிணைப்பு தற்போது ராகுல் காந்தி-விஜய் ஆகியோரிடையே இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், ஒரு கூட்டணி வலுவாகத் திகழ வேண்டுமெனில் கட்சிகளுக்கிடையே கொள்கை ரீதியான கருத்தொற்றுமை நிலைத்திருக்க வேண்டும். தவிர, அரசியல் ஆதாயங்களுக்காக ஒன்று கூடினால் விரைவில் அந்த உறவு முற்றுப்பெறும் என்பதுதான் வரலாறு.
ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.
பிரச்னைகள் தீரவேண்டும்
தமிழக வெற்றிக் கழகம் 'இண்டி' கூட்டணியில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் முக்கியமான அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இது தேர்தல் வெற்றிக்கான கணக்காக மட்டுமல்லாமல், கொள்கை சார்ந்த கூட்டணியாகவும் அமைய வேண்டும். புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தவெக, தனது தனித்துவமான கொள்கைகளையும் மக்கள் நலன் அணுகுமுறையையும் காப்பது அவசியம். கூட்டணி மூலம் கிடைக்கும் அரசியல் பலம் மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் பயன்படுத்தப்பட வேண்டும். கூட்டணி என்பது பதவிக்கான பாதையாக அல்ல; மக்கள் நலனுக்கான பாலமாக அமைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
பா.நூருல்லாஹ், மதுரை.
நல்ல மாற்றங்களுக்காக...
'இண்டி' கூட்டணியில் தவெக இணைந்தது அந்தக் கட்சி எடுத்துள்ள மிகச் சரியான முடிவாகும். நல் மாற்றங்களை மையமாக வைத்து அமைந்ததுதான் தவெக ஆட்சி. மத்தியிலும் தமிழ்நாட்டைப் போலவே உறுதியான, மதக் கலப்பில்லாத, மாற்றுக் கட்சி தேவைப்படுகிறது. எனவே, 'இண்டி' கூட்டணியில் தவெக இணைந்தது, மத்தியிலும், மாநிலத்திலும் உறுதியான, ஊழலற்ற, மதச் சார்பில்லாத ஆட்சிகள் அமைய வேண்டும் என்பதற்காகத்தான்.
ஜோ.வே. ஜீவா, திருப்பதிசாரம்.
பொருந்தாக் கூட்டணி
'இண்டி' கூட்டணியில் இணைந்துள்ளதாக அறிவித்திருக்கிறார்களே தவிர, முழு மனத்துடன் இணைந்துள்ளதாகத் தெரியவில்லை. தவெகவினரின் எண்ணம் முதல்வர் விஜய்யை பிரதமர் விஜய்யாக பார்க்க வேண்டும் என்பதுபோலத்தான் தெரிகிறது. முதல்வர் விஜய்யும் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை. இப்படிப் பொருந்தாக் கூட்டணி இருப்பதைக் காட்டிலும் பிரிந்த கூட்டணியாக இருப்பதே மேல். மேலும், பாஜகவை எதிர்த்துப் பேசாமல் 'இண்டி' கூட்டணியில் தவெக இருப்பது என்பது அர்த்தமற்றது. ஒருவேளை தவெக- காங்கிரஸ் கூட்டணி மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சிறப்பான வெற்றி பெறுமானால், காங்கிரஸýக்கு தவெக நிபந்தனைகளை விதிக்கவும் வாய்ப்புள்ளது.
டி. சிவக்குமார், ஆண்டிபட்டி.
அவசியமானது
தவெகவின் அரசியல் எதிரியான திமுகவை தனிமைப்படுத்தவும், தேசிய அளவில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும், 2029 மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி கட்டமைப்பை இப்போதிருந்தே வலுப்படுத்தவும் இந்த இணைப்பு அவசியமானதாகிறது. மேலும், 'இண்டி' கூட்டணியில் தவெக இணைந்ததால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டு சிந்தனைக்கு முடிவு ஏற்படும். 2029 மக்களவைத் தேர்தல் களத்தில் 'இண்டி' கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த இணைப்பு இருக்கும்.
கே.ஆர். ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.
பேசுவதற்கு ஏதுமில்லை
தாங்கள் 'இண்டி' கூட்டணியில் இணைந்துவிட்டோம் என்று தவெக சார்பில் முறையான அறிக்கை வெளியிடப்பட்டதா எனக் கேட்கத் தோன்றுகிறது. எஸ்.ஐ.ஆர். குளறுபடி தொடர்பாக காங்கிரஸ் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தவெக சார்பில் கலந்து கொண்டனர். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு நாங்கள் ஆதரவானவர்கள் அல்லர்; எதிரானவர்கள்தான் என்பதை காட்டிக் கொள்வதற்காக மக்களிடம் அதன் தாக்கம் வீரியமடைந்ததையடுத்து தவெக கலந்து கொண்டதே தவிர, அதிகாரபூர்வ அறிவிப்பு வராத வரை அதைப் பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை.
மு. முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.
மணமற்ற மலர்
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 'இண்டி' கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸýக்கு கிடைத்துள்ள மாற்று ஏணி. இதுவரை திமுக கட்டுப்பாட்டில் இருந்து வந்த காங்கிரஸ், தற்போது தவெகவிடம் சரண் அடைந்துள்ளது. 2029 மக்களவைத் தேர்தலில் தவெக-விடம் எவ்வாறு அனுசரித்துப் போகப் போகிறது என்பது புரியாத புதிர்தான். தற்போதைய சூழ்நிலையில் மணம் இல்லாத 'இண்டி' கதம்பத்தில், தவெக மற்றுமொரு மணம்- நிறம்- குணம் அற்ற மலர்.
வெ.க. சந்திரசேகரன், வெள்ளக்கிணறு.
தவெகவுக்கு ஆதாயம்
'இண்டி' கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைந்துள்ளது வரவேற்கத்தக்கது. தவெகவும் மதச்சார்பற்ற கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறது, அதுபோலத்தான்'இண்டி' கூட்டணியும் மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணியாகச் செயல்படுகிறது. நடந்த முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவும் காங்கிரஸýம் கூட்டணிக்கு முயற்சித்து கடைசி நேரத்தில் அது முடியாமல் போனது. 'இண்டி' கூட்டணியில் தவெக சேருவதால் தவெகவுக்குத்தான் பயன். தேசிய அளவில் தவெக வளர்வதற்கு இந்த இணைப்பு துணை புரியும்.
என். சிவசண்முகம், குளத்துப்பாளையம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.