ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா
தமிழ்நாட்டில் திமுகதான் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொண்டதாக ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு...
தமிழ்நாட்டின் எஸ்.ஐ.ஆர். ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், எஸ்.ஐ.ஆர். நடைமுறையை எதிர்ப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலரும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
”மாநில உரிமைகள் என்றால், தில்லியில் பதுங்குவது, தமிழ்நாட்டில் பாய்வது. எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு; ஆளும் கட்சியாக இருக்கும்போது மற்றொரு பேச்சு. 70 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் இருக்கும் தி.மு.க-வின் அரசியல் 'டிராமா'க்கள், காலம் காலமாகத் தமிழகத்தில் இப்படித்தான் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எஸ்.ஐ.ஆர்.முறைகேடுகளை எதிர்த்து நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கள்ள மௌனம் காத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., 'எஸ்.ஐ.ஆர் டிராமா'-வை புதிதாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
எஸ்.ஐ.ஆர். பணிகள் தமிழ்நாட்டில் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்த நாளில் இருந்து, தி.மு.க-வின் செயல்பாடுகளை கவனித்தவர்களால் தி.மு.க.-வின் திருட்டு 'டிராமா'-வை எளிதாகவே புரிந்து கொள்ள முடியும். எஸ்.ஐ.ஆர்.-ஐ ஆரம்பத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்பதுபோல் காட்டிய தி.மு.க., மெல்ல மெல்ல தேர்தல் ஆணையத்தோடும் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியோடும் ரகசிய கூட்டணியை தி.மு.க. அமைத்துக் கொண்டது. அந்தக் கூட்டணி முழுமை பெற்றதையடுத்து, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் முழுவதும் தி.மு.க-வின் கட்டுப்பாட்டிலேயே நடைபெற்றது. எஸ்.ஐ.ஆர். என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தால், மத்திய பா.ஜ.க. அரசில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீதியிலும்... ஒவ்வொரு தெருவிலும்... ஒவ்வொரு சந்துகளிலும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்தியது தி.மு.க.தான். இதை யாராலும் மறுக்க முடியுமா? தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் மறுக்க முடியுமா?
2025 அக்டோபர் 27-ஆம் தேதி முதல் 2026 பிப்ரவரி 23-ஆம் தேதி வரை எஸ்.ஐ.ஆர். பணி நடந்த காலம் முழுவதும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் தி.மு.க தலைவர்மு.க. ஸ்டாலின்தான். ஒவ்வொரு வாக்குச்சாவடியின் 'ஓட்டு ஜாபிதா'வும் தி.மு.க-வின் கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர்களிடம்தான் இருந்தன. களத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள் அனைவரும் மாநில அரசின் ஊழியர்களாக இருந்தாலும், வாக்காளர் பட்டியல் போய்ச் சேர்ந்தது திமுக ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர்களின் கைகளுக்குத்தான்! எந்த அதிகாரி... எந்த வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்பதைத்கூட தி.மு.க. மாவட்டச் செயலாளர்களும், அந்தந்த மாவட்டங்களில் அன்றைக்கு அமைச்சர்களாக இருந்தவர்களுமே முடிவு செய்தனர்.
அதோடு, 70 ஆண்டுகள் தேர்தல் அனுபவமும் கள்ள ஓட்டுக்கள் போடுவதில் கின்னஸ் சாதனையை மிஞ்சிய சாதனையைப் படைத்துள்ள தி.மு.க. இதற்காக, 7 லட்சம் பேரை களத்தில் இறக்கியது. அவர்கள் அத்தனை பேரும் தி.மு.க நிர்வாகிகள், தி.மு.க. ஆதரவாளர்கள். இவர்களில், 75 ஆயிரத்து 32 பிஎல்ஏ-க்கள், 5 லட்சத்து 50,000 வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்கள், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் என்று வேலைகளைப் பிரித்துக் கொடுத்து, ஒரு ஜனநாயகப் படுகொலைக்கு கூலியாட்களாக அவர்களை நியமித்து, தங்கள் ஊழல் பணத்தில் கோடிக்கணக்கில் செலவும் செய்தது. அந்தக் கூலியாட்கள்தான் முழுமையாக எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொண்டனர். "உங்கள் வாக்குகள் பறிபோகாது. தி.மு.க முகவர்கள் உங்கள் வீடுகளுக்கே வந்து உங்கள் விபரங்களைப் பெற்றுக் கொள்வார்கள்" என்று தி.மு.க தலைவரும் அன்றைக்கு முதலமைச்சராக இருந்தமு.க.ஸ்டாலினும் இதைப் பெருமையாகப் பேசினார். அன்றைக்கு எதிர்கட்சித் தலைவராக இருந்த அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எஸ்.ஐ.ஆர் வேலைகளை தேர்தல் ஆணையத்திற்காக தி.மு.க தான் செய்கிறது. தி.மு.க கட்டுப்பாட்டில்தான் எஸ்.ஐ.ஆர் வேலைகள் நடக்கின்றன" என்று குற்றம்சாட்டினார்.
ஆனால், எஸ்.ஐ.ஆர் என்ற அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு கூட அல்ல... பிகார் மாநிலத்தில் நடந்தபோதே, தமிழக வெற்றி கழகம் அதைக் கடுமையாக எதிர்த்தது. தொடர்ந்து எஸ்.ஐ.ஆர். நடைமுறைகள் வந்தபோதும், அதில் குளறுபடிகள் வந்தபோதும், முதற்கட்டமாக 97 லட்சத்திற்கும் அதிகமாக வாக்காளர்கள் நீக்கப்பட்டபோதும்... தமிழக வெற்றிக் கழகம் கடுமையாக எதிர்த்தது. அறிக்கைகள் விட்டு எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்ல.. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி எஸ்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு நடத்தியது தமிழக வெற்றிக் கழகம். ஆனால், எஸ்.ஐ.ஆர் வந்தபோதும், அதன் நடைமுறைகள் தொடங்கியபோதும் எதிர்த்த தி.மு.க, எஸ்.ஐ.ஆர்-ல் முதற்கட்டமாக 97 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள்... ஏறத்தாழ ஒருகோடி பேர் நீக்கப்பட்ட நேரத்தில் ஒரு அறிக்கைகூட வெளியிட்டு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதன்பிறகு, இரண்டாவது கட்ட நடைமுறையில், சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் மட்டும் மீண்டும் சேர்க்கப்பட்டனர். இறுதியாக, 74 லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். 6.4 கோடியாக இருந்த தமிழ்நாட்டு வாக்காளர்களின் எண்ணிக்கை 5.7 கோடியாகச் சுருங்கியது. இதில், தமிழக மக்களின் புதிய நம்பிக்கையாக தோன்றியிருந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என்று கருதப்பட்ட, 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் - பெண்கள் குறிவைத்து நீக்கப்பட்டிருந்தனர். மாற்றத்தை விரும்பிய தமிழ்நாட்டின் புதிய தலைமுறையினரின் உரிமை பறிக்கப்பட்டிருந்தது. ஜனநாயகத்தின் வலிமையை அழித்தொழிக்கும் இந்த வேலையை தி.மு.க-வே தலைமையேற்று நடத்தியது.
அந்த மமதையில்தான், 21.2.2026 அன்று மதுரையில் நடைபெற்ற திமுக தென் மண்டல வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்களுக்கான ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி மாநாட்டில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் மூலம் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் யாருடைய வாக்குகளையும் நீக்க விடாமல், பம்பரமாக உழைத்த இயக்கம் திமுக. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யப் போவது எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொண்ட தி.மு.க-வின் பிஎல்ஏ, பிஎல்சி, பிஎல்ஏ என பணியாற்றிய 7 லட்சம் பேர்தான்” என்று பேசினார். அதோடு நிற்கவில்லை, தேர்தல் ஆணையம் மற்றும் அரசு இயந்திரத்தில் இருந்து வாக்காளர் குறித்த தரவுகளைத் திருடிக் கொண்ட, தி.மு.க-வின் 'பென்' நிறுவனம், தேர்தல் நாளான்று வாக்களித்தவர்களை 'டிராக்' செய்யும் புதிய செயலி ஒன்றையும் உருவாக்கியது.
"தங்கள் ஆதரவு வாக்குகளை எல்லாம் காப்பாற்றிக் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவான வாக்குகளை எல்லாம் எஸ்.ஐ.ஆர். மூலம் நீக்கிவிட்டோம்; இனி நம் வெற்றியை யாரும் தடுக்க முடியாது" என்ற அகங்காரத்தில் இருந்தது தி.மு.க! அது உண்மையும்கூட. அப்படி நடந்ததால்தான் தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள், பெண்கள், வயதானவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்து ஒரு மகத்தான வாக்குப் புரட்சிக்கு தயாராக இருந்தபோதும், 108 தொகுதிகளில் மட்டுமே தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. எஸ்.ஐ.ஆர் இல்லாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 160 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கும். தி.மு.க சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சி என்ற இடத்தைக்கூட பெற்றிருக்காது.
இப்படி, இந்தியாவின் தனித்துவமான ஜனநாயகத்தைப் படுகொலை செய்த பழியில் பங்கேற்றுவிட்டு, இன்றைக்கு முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் நடத்திக் கொண்டிருக்கும் 'டிராமா'-வையும் தி.மு.க-வையும் இனி தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்; ஜனநாயக சக்திகளும் ஆதரிக்காது. இனிவரும் எந்தத் தேர்தலிலும் தி.மு.க வெல்லாது. ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் பழியில் பங்கெடுத்த தி.மு.க-வை மொத்தமாக தமிழ்நாட்டு மக்கள் ஜனநாயகத் தேர்தல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்; இனியும் அப்புறப்படுத்துவார்கள். அதற்கு உதாரணம்தான், 6 மாதங்களுக்கு முன்பு 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று அகங்காரத்துடன் பேசிக் கொண்டிருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அண்மையில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பெற்றதையே பெருமையாகப் பேசி விளம்பரம் செய்யும் அவல நிலைக்கு தமிழ்நாட்டு மக்கள் தள்ளினர். இது ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்திய தி.மு.க-விற்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் மக்கள் அளித்த ஜனநாயகத் தீர்ப்பு!
உரிய நேரத்தில், எஸ்.ஐ.ஆர் பணிகளில் தி.மு.க செய்த சதிவேலைகளை முழுமையாக ஆதரங்களுடன் அம்பலப்படுத்துவோம்.
தமிழக வெற்றிக் கழகம் என்றும் ஜனநாயகத்திற்கு எதிராக, விதிமுறைகளுக்கு மாறாக நடைபெறும் எஸ்.ஐ.ஆர் - ஐ எதிர்க்கும்.
முழுமையாக தமிழ்நாட்டு வாக்காளர்களின் ஜனநாயக உரிமையைக் காக்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
M.K. Stalin is the prime culprit behind the murder of democracy! – Aadhav Arjuna
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.