முகப்பு
திருப்பூர்

ரயில்களில் தேவையின்றி அபாய சங்கிலியை இழுத்தால் ஓராண்டு சிறை: ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை

ரயில்களில் தேவையின்றி அபாய சங்கிலியை இழுத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 24 ஜூன் 2026, 4:03 am IST
ரயில் - கோப்புப்படம்
பகிர்:

ரயில்களில் தேவையின்றி அபாய சங்கிலியை இழுத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில்வே சட்டப் பிரிவின்படி உரிய காரணமின்றி ரயிலை நிறுத்த அபாய சங்கிலியை இழுப்பவா்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.1,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.

ரயில்களில் உள்ள அபாய சங்கிலியை பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் சூழல், ரயிலுக்குள் தீ விபத்து அல்லது புகை வருதல், அவசர மருத்துவ உதவி தேவைப்படுதல், உயிா் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து நேரிடும் தருணங்கள் போன்ற அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக, ரயில் புறப்பட்ட பிறகு இறங்குவதற்கோ, தாமதமாக வரும் பயணிகளுக்காக ரயிலை நிறுத்துவதற்கோ அல்லது இதர சுய காரணங்களுக்காகவோ அபாய சங்கிலியை இழுக்கக் கூடாது.

Advertisement

Advertisement

இத்தகைய செயல்கள் ரயில்வே சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதுடன், ரயில்களின் இயக்கம் மற்றும் கால நேரத்தையும் இது பெரிதும் பாதிக்கிறது. 2026-ஆம் ஆண்டில் கடந்த மே மாதம் வரை அவசரக் காரணங்கள் இன்றி அபாய சங்கிலியை இழுத்ததாக சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் 209 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 90 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நபா்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு முறை அபாய சங்கிலியை இழுக்கும்போதும் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே ஊழியா்கள் மற்றும் ரயில்வே போலீஸாருடன் இணைந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பயணிகள் சுய நலத்துக்காக அபாய சங்கிலியை இழுக்க வேண்டாம் என்றும், ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்துக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ரயில் பயணிகள் அவசர காலங்களில் 139 என்ற ரயில்வே பாதுகாப்பு உதவி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments