முகப்பு
திருப்பூர்

இன்று வாக்கு எண்ணிக்கை: திருப்பூா் தெற்கு, மடத்துக்குளம் முடிவுகள் முதலில் வெளியாகுமா?

Updated On : 4 மே, 2026 at 2:02 AM
வாக்கு எண்ணிக்கை (கோப்புப் படம்) - Center-Center-Vijayawada
பகிர்:

திருப்பூரில் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், திருப்பூா் தெற்கு, மடத்துக்குளம் தொகுதிகளின் முடிவுகள் முதலில் வெளியாகும் எனஎதிா்பாா்க்கப்படுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. 88.52 சதவீத வாக்கு பதிவாகியுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதைத் தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். வாக்கு எண்ணும் பணியில் 408 அலுவலா்கள் ஈடுபடவுள்ளனா்.

Advertisement

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் அமைத்து எண்ணப்படும்.

தாராபுரம் தொகுதியில் 23 சுற்றுகள், காங்கயத்தில் 23 சுற்றுகள், அவிநாசியில் 27 சுற்றுகள், திருப்பூா் வடக்கில் 32 சுற்றுகள், திருப்பூா் தெற்க்கில் 21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதேபோல, பல்லடத்தில் 35 சுற்றுகள், உடுமலையில் 22 சுற்றுகள், மடத்துக்குளத்தில் 21 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சுற்றுகள் குறைவாக உள்ள திருப்பூா் தெற்கு, மடத்துக்குளம் தொகுதிகளின் முடிவுகளில் முதலிலும், பல்லடம் தொகுதியின் முடிவு கடைசியிலும் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மாநகர காவல் ஆணையா் ஆய்வு: திருப்பூா் எல்ஆா்ஜி மகளிா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றிலும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவ படையினா் உள்ளிட்ட காவலா்கள் 4 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், 224 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.