10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முழு விவரம்!
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் விவரம் குறித்து...
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) காலை வெளியாகின. இந்தத் தேர்வில் 94.31 % மாணவ, மாணவிவகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்.6 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தமாக 8.82 லட்சம் பள்ளி மாணவர்கள் எழுதியிருந்தனர்.
இந்த நிலையில், பொதுத்தேர்வு முடிவுகளை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (மே 20) காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
Advertisement
Advertisement
தேர்வு முடிவுகள் பார்ப்பது எப்படி?
மாணவா்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண், பிறந்ததேதி ஆகியவற்றைப் பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்.
இந்தத் தேர்வில் 94.31 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் 4,01,214 (92.15%), மாணவிகள் 4,19,891 (96.47%) சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 4.32 சதவீதம் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வுக்கு வருகை புரியாதவர்கள் 11,174 பேர்.
கடந்த மார்ச் 2025 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 8,71,239. தேர்ச்சி பெற்றோர் 8,17, 261. தேர்ச்சி சதவீதம் 93.80 சதவீதம்.
கடந்த ஆண்டு பொதுத்தேர்வினை விட இந்தாண்டு தேர்ச்சி 0.51 சதவீதம் கூடுதலாக உள்ளது.
தனித்தேர்வர்கள் 35.91 சதவீதம்(24,353 பேரில் 8,744 பேர் தேர்ச்சி)
சிறைவாசிகள் 95.68 சதவீதம்(370 பேரில் 354 பேர்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாற்றுத்திறனாளி தேர்வர்கள் 85.89 சதவீதம்(13,292 பேரில் 11,416 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்).
அறிவியல் பாடத்தில் 10,476 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர்.
பள்ளி வாரியான தேர்ச்சி சதவீதம்
* அரசுப் பள்ளிகள் 91.88%
* அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.34%
* இருபாலர் பள்ளிகள் 94.42%
* தனியார் பள்ளிகள் 98.14%
* பெண்கள் பள்ளிகள் 96.42%
* ஆண்கள் பள்ளிகள் 88.50%
* பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 7.92 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோன்று இருபாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 5.92 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* தேர்வு எழுதிய மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை 12,467.
* மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,490
* உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 4,977
நூறு சதவீதம் பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை
* நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை 5,171
* 95 சதவீதம் தேர்ச்சி பெற்ற மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை 8,233
* 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 1,931
* 95 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 3,463
முதல் 5 மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம்
புதுக்கோட்டை 97.57 சதவீதம், சிவகங்கை 97.54 சதவீதம், தஞ்சாவூர் 97.41 சதவீதம், திருச்சி 97.31 சதவீதம், கன்னியாகுமரி 97.30 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிறப்பிடம் பெற்ற 5 மாவட்டங்கள் - அதிகம் தேர்ச்சி சதவீதம் பெற்ற அரசுப் பள்ளிகள்
சிவகங்கை 97.42 சதவீதம், புதுக்கோட்டை 97.09 சதவீதம், தஞ்சாவூர் 96.89 சதவீதம், ராமநாதபுரம் 96.78 சதவீதம், திருச்சி 96.48 சதவீதம்.
பாடம் வாரியான தேர்ச்சி விகிதம்
தமிழ் 98.43 சதவீதம், ஆங்கிலம் 99.44 சதவீதம், கணிதம் 97.36 சதவீதம், அறிவியல் 98 சதவீதம், சமூக அறிவியல் 97.93 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடம் வாரியாக 100-க்கு 100 மதிபெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் எண்ணிக்கை
தமிழ் பாடத்தில் 34 பேர், ஆங்கிலத்தில் 92 பேர், கணிதத்தில் 3,194 பேர், அறிவியல் பாடத்தில் 10,476 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 3,336 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
ஏதேனும் ஒரு பாடத்தில் 17,132 மாணவர்கள் 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதேபோன்று, ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 2,774 பேர்.
உதவி மைய எண்
தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம்.