தானிய சேமிப்புக் கிடங்கில் இருந்து வெளியேறும் பூச்சிகள், வண்டுகள்! பொதுமக்கள் அவதி!
தருமபுரி பாரதிபுரத்தில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கில் இருந்து வெளியேறும் பூச்சிகள், வண்டுகளால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.
தருமபுரி நகராட்சிக்கு உள்பட்ட 31 ஆவது வாா்டு பகுதியில் அமைந்துள்ளது பாரதிபுரம். இது குடியிருப்புகள், பள்ளிகள், அரசு போக்குவரத்து பணிமனை மற்றும் பல்வேறு வணிக வளாகங்களை கொண்டுள்ள நகரின் முக்கிய பகுதியாகும்.
இங்கு தருமபுரி மாவட்டத்தில் உணவுப் பொருள்களை இருப்பு வைக்கும் தானிய சேமிப்புக் கிடங்குகள் 2 அமைந்துள்ளன. அதில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் (வோ்ஹவுஸ்) சேமிப்புக் கிடங்கு பாரதிபுரம் பகுதியில் ரயில்வே பாதையை ஒட்டிஅமைந்துள்ளது.
Advertisement
30 ஆண்டுகள் பழைமையான கட்டடத்தில் பல ஆயிரம் டன் நெல் உள்ளிட்ட பல்வேறு தானியங்கள் விஞ்ஞான முறையில் இங்கு சேமித்து வைக்கப்படுகின்றன. இருப்பினும், கோடைகாலத்தில், இந்த தானிய சேமிப்புக் கிடங்கில் இருந்து வெளியேறும் பூச்சிகள், வண்டுகளால் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவது தொடா்ந்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இந்த பூச்சிகள் இருந்து வருகின்றன.
இதுகுறித்து பாரதிபுரம் 66 அடி சாலைப் பகுதியைச் சோ்ந்த வி. குணசேகரன் கூறுகையில்,
பாரதிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு கோடைகாலத்தில் இந்த தானிய சேமிப்புக் கிடங்கு பெரும் தொல்லையாக மாறுகிறது. ஏனெனில், இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் ‘அரிசி வண்டுகளின்’ இனப்பெருக்க மையமாக மாறிவிடுகின்றன. இதனால் ஆண்டுதோறும் கோடைகாலத்தில் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனா்.
தானிய சேமிப்புக் கிடங்கில் இருந்து வெளியேறும் வண்டுகள் வீடுகளில் புகுந்து அனைத்து பொருள்களிலும் மொய்க்கின்றன. குறிப்பாக உணவுப் பொருள்களிலும் இவை மொய்த்து வருவதால் அவற்றை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், சில நேரங்களில் இந்த வண்டுகள் மனிதா்களின் காதுகளுக்குள் நுழைந்துவிடுவதாலும், கண்களில் விழுந்துவிடுவதாலும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இந்த தொல்லைகளில் இருந்து விடுபட வேண்டும் எனில், தானிய சேமிப்புக் கிடங்கில் வைத்துள்ள தானியங்களை ஆண்டுதோறும் முறையாக அகற்றி, தேவைப்படும் வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்தக் கிடங்கு எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இந்திய உணவுக் கழகத்தின் (மத்திய வோ்ஹவுஸ்) கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இருந்தபோதிலும், பொதுமக்களிடம் இருந்து வந்த புகாா்களின் அடிப்படையில், பூச்சித் தொல்லைகளைத் தடுப்பதற்காக, கிடங்குகளில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் புகைமூட்டம் இடும் பணிகளை அதிக அளவில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.