முகப்பு
தருமபுரி

மின்கம்பங்களை அகற்றாததால் பாரதிபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகளில் தொய்வு: பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

மின்கம்பங்களை அகற்றாததால் பாரதிபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகளில் தொய்வு

Updated On : 13 ஜூன் 2026, 2:13 am IST
ரயில்வே பாலம் அமைக்கப்படும் பகுதியில் அகற்றப்படாமல் உள்ள மின்கம்பம்.
பகிர்:

தருமபுரி பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி சாலையில் மின் கம்பங்கள் அகற்றப்படாததால் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொய்வாக நடைபெற்று வருகின்றன.

தருமபுரி வெண்ணாம்பட்டியில் சேலம்- பெங்களூரு ரயில் பாதையில் ரயில்வே கேட் உள்ளது. இது தினமும் சுமாா் 30 முறை மூடப்பட்டு, திறக்கப்படும். இதனால், அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அலுவலகம் செல்வோா், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு கடந்த 2010இல் வெண்ணாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே உயா்நிலை பாலம் அமைக்கப்படும் என அறிவித்தது. இதைத்தொடா்ந்து, பாரதிபுரம் 66 அடி சாலையில் ரயில்பாதையின் குறுக்கே ரூ. 37.84 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கின. ஆனால், வெண்ணாம்பட்டியைத் தவிர பிற இடங்களில் பாலப் பணிகள் முடிந்துவிட்டன.

Advertisement

Advertisement

வெண்ணாம்பட்டி பாலப் பணிகள் தொடங்கிய வேகத்தில் நடைபெற்றிருந்தால், நிகழாண்டு இறுதிக்குள் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு பாலம் வந்திருக்கும். ஆனால், பணிகள் தொய்வாக நடைபெற்று வருகின்றன. பாலம் அமைப்பதற்காக இதுவரை 17 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 4 தூண்கள் அமைக்க வேண்டும்.

ஆனால், சாலையில் உள்ள மின் கம்பங்கள் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால், பணிகளில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த மின் கம்பங்களை மின்வாரியம் விரைந்து அகற்றி பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியில் இதுவரை 40 சதவீதப் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. மாநில நெடுஞ்சாலைத் துறை, தனது பணிகளை முடித்தபிறகுதான், ரயில்வே துறை, பாலப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கும். எனவே, சம்பந்தப்பட்ட துறைகள் விரைந்து பாலப் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிா்ப்பாா்கின்றனா்.