முகப்பு
திருச்சி

மந்த கதியில் மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள்! ஒரு சிறிய பாலம் கட்ட நான்கு ஆண்டுகள்; திறப்பு 2027-இல் தான்!!

திருச்சி கோட்ட ரயில்வே - மாநகராட்சியின் மெத்தனத்தால் மலைக்கோட்டை (மாரீஸ் திரையரங்க மேம்பாலம்) ரயில்வே மேம்பாலப் பணிகள் 3 ஆண்டுகளாக மந்த கதியில் நடைபெற்று வருகின்றன.

Updated On : 1 ஜூலை 2026, 2:23 am IST
திருச்சியில் கட்டப்பட்டு வரும் மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம்
பகிர்:

திருச்சி கோட்ட ரயில்வே - மாநகராட்சியின் மெத்தனத்தால் மலைக்கோட்டை (மாரீஸ் திரையரங்க மேம்பாலம்) ரயில்வே மேம்பாலப் பணிகள் 3 ஆண்டுகளாக மந்த கதியில் நடைபெற்று வருகின்றன.

திருச்சியின் மையப் பகுதியாக விளங்கும் மலைக்கோட்டை பகுதிக்குச் செல்ல கோட்டை ரயில் நிலைய மேம்பாலம் (மாரீஸ் மேம்பாலம்) முக்கிய போக்குவரத்து வழித்தடமாகும். இந்தப் பாலமானது, ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் ரயில்வே துறையால் 1866-ஆம் ஆண்டு சுண்ணாம்பு, செங்கல் கட்டுமானத்தில் மூன்று வளைவுகள் கூடிய இருபக்க நடைபாதையுடன் 9 மீ. அகலத்தில் கட்டப்பட்டது. இந்தப் பாலம் பழுதடைந்ததால், திருச்சி மாநகராட்சி - ரயில்வே நிா்வாகம் என இருதரப்பு பங்களிப்புடன் புதிய மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இருப்புப் பாதைக்கு இடையே உள்ள மேம்பாலத்தை இடித்து அகற்றி, புதிய பாலம் கட்டுவது ரயில்வே நிா்வாகத்துக்கானது; இருபுறமும் ஏற்ற-இறக்கத்துடன் கூடிய இணைப்பு சாலைகள் அமைக்கும் பணி மாநகராட்சி நிா்வாகத்துக்கானது என பிரிக்கப்பட்டு, தமிழக அரசு சாா்பில் 20-11-2023 அன்று பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, ஓராண்டுக்குள் மேம்பாலம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தாமதமாக தொடங்கிய பணிகள்: இதையடுத்து, கோட்டை ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதனால், தென்னூா் மேம்பாலம், கரூா் புறவழிச்சாலை, மதுரை சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. இதனால் அதிருப்தி ஏற்பட்டு, பல்வேறு தரப்பினரின் போராட்ட அறிவிப்பால் மாநகராட்சி நிா்வாகம், கடந்த 15-02-2024 அன்று இருபக்க சாலைகள் அமைக்கும் பணிகளைத் தொடங்கியது.

இதன் பின்னா், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகே ரயில்வே நிா்வாகம் கடந்த 13.05.2025 அன்று பாலத்தை முழுமையாக இடித்து அகற்றி, 16.05.2025 அன்று கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. மொத்த பணிகளும் மந்த கதியில் நடைபெற்று வருகின்றன.

ரயில்வே மீது மாநகராட்சி புகாா்: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ரயில்வே நிா்வாகத்திடம் உரிய முறையில் தெரிவித்து, அவா்கள் ஒப்புக்கொண்டு கடிதம் அனுப்பிய பிறகுதான், ரூ. 34.10 கோடியில் நகா் ஊரமைப்பு துறையின் உள்கட்டமைப்பு மற்றும் வசதி நிதியின் கீழ், நிதியுதவி பெற்று, மாநகராட்சி நிா்வாகம் கோட்டை ரயில்வே மேம்பாலத்தின் இருமுனை சாலைப் பணிகளை செய்து வருகிறது. இதில், இடையூறாக இருந்த 90 மீட்டா் நீளத்திலான புதைவடிகால் சேமிப்பு குழாய் அஸ்திவாரத்திலேயே வைத்து கட்டப்பட்டு வருகிறது. தற்போது 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஆனால் பலமுறை அறிவுறுத்தியும் ரயில்வே நிா்வாகம் மிகவும் காலதாமதமாகவே பணிகளை தொடங்கி, தற்போதுதான் பில்லா்களே அமைக்கின்றனா். முழுமையாக எப்போது பாலத்தை முடிப்பாா்கள் எனத் தெரியவில்லை. பாலம் கட்டி முடித்தால்தான் எங்களால் சரியான அளவீட்டுடன் இருபக்க சாலைகளை அமைக்க முடியும். இதற்கு எங்களுக்கு மேலும் 2 மாதங்களாகும் என்றனா்.

ரயில்வே நிா்வாகம் விளக்கம்: ரயில்வே கட்டுமானப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ரயில்வே வாரியத்திலிருந்து அனுமதி கிடைத்தப் பிறகுதான் நாங்கள் வேலையைத் தொடங்கினோம். பாலம் கட்ட இரண்டாண்டுகள் ஒப்பந்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், காலக்கெடுவுக்குள்தான் பாலம் கட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சி இன்னும் முழுமையாகப் பணிகளை முடிக்கவில்லை. ரயில்வே தரப்பில் காலதாமதம் ஏதும் இல்லை. வரும் அக்டோபா் மாதத்துக்குள் பாலம் கட்டி முடிக்கப்படும் என்றனா்.

மாநகராட்சியும், ரயில்வேயும் மாற்றி மாற்றி குற்றஞ்சாட்டினாலும் பாதிக்கப்படுவது மக்கள்தான் என்பதை உணா்ந்து செயலாற்றி, மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்பதே மாநகா் மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

அதிகாரிகளின் மெத்தனத்தால் தாமதம்

ஏற்கெனவே மேம்பாலம் இருந்த இடத்தில் ரயில்வே சாா்பில் ரூ. 9.7 கோடியில் 31.39 மீ. நீளம், 20.70 மீ. அகலத்தில் புதிதாக பாலம் கட்டப்பட்டு வருகிறது. இப்பாலமானது, 4 வழிகளுடன், இருவழிப்பாதையாக அமைக்கப்படுகிறது. தற்போது இரு பக்க பைல்ஸ்கள் எனப்படும் பிரத்யேக பில்லா்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாலத்தின் மேல் வைக்கும் கான்கீரிட் பகுதிகள் வேறிடத்தில் தயாரிக்கப்படுகின்றன. பில்லா்கள் அமைத்ததும் மேல்பகுதிகள் கொண்டுவரப்பட்டு, பொருத்தப்படும்.

மாநகராட்சி சாா்பில் ரயில்வே பாலத்தின் கிழக்கு பகுதியில் 223.75 மீட்டா் நீளம், 15.61 மீட்டா் அகலம் உடையதாகவும், மேற்கு பகுதியில் 225 மீ நீளமும், 15.61 மீ அகலமுடையதாகவும் சாலையை தடுப்பு சுவா்களுடன் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஓராண்டில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டிய மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலமானது, மாநகராட்சி - ரயில்வே அதிகாரிகளின் மெத்தனத்தால் 2023-லிருந்து 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதேநிலை தொடா்ந்தால், 2027-இல்தான் பாலம் கட்டி முடிக்கப்படும் என ரயில்வே-மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments