பாரத மாதா ஆலயத்தை சமத்துவ பொதுக் கோயிலாக விரைவில் கட்ட வேண்டும்: குமரி அனந்தன் வேண்டுகோள்
பாப்பாரப்பட்டியில் அமைக்கப்படவுள்ள பாரத மாதா ஆலயத்தை சமத்துவ பொதுக் கோயிலாக விரைவில் கட்டி எழுப்ப வேண்டும் என
பாப்பாரப்பட்டியில் அமைக்கப்படவுள்ள பாரத மாதா ஆலயத்தை சமத்துவ பொதுக் கோயிலாக விரைவில் கட்டி எழுப்ப வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தருமபுரி பாரத மாதா ஆன்மிக சேவை மையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அவர் பேசியது:
தியாகி சுப்பிரமணிய சிவா முதலில் மானாமதுரை பகுதியிலுள்ள பசலை கிராமத்திலும், பிறகு காரைக்குடி பகுதியிலுள்ள அமராவதிபுரத்திலும்தான் பாரத மாதா ஆலயத்தை அமைக்க விரும்பினார். அங்கு சாத்தியக்கூறுகள் அமையாததால், பிறகு, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் ஆலயத்தை அமைக்க முடிவு செய்து, இடத்தையும் வாங்கினார்.
தற்போது அரசே இந்த ஆலயத்தை அமைக்க முன்வந்திருப்பதால், வட மாநிலத்தவர் மட்டுமின்றி, உலகச் சுற்றுலாப் பயணிகளும் கூட பாப்பாரப்பட்டிக்கு வந்து செல்ல வாய்ப்பிருக்கிறது. உலகமே வந்து "பார்ப்பார்'பட்டியாக இது மாற இருக்கிறது.
பாரத மாதா ஆலயத்தில் அனைத்து மதத்தவரும், அனைத்துச் சாதியினரும் உள்ளே கருவறை வரை நுழைந்து பாரத மாதாவைத் தொட்டு வழிபட வேண்டும் என்பதுதான் சுப்பிரமணிய சிவாவின் விருப்பம். அதன்படி, கோயிலை அரசு வடிவமைக்க வேண்டும். கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையே சிபாரிசு செய்ய ஓர் ஆள் தேவையில்லை என்ற மகத்தான புரட்சியை முன்வைத்தவர் சுப்பிரமணிய சிவா.
தனது "ஞானபாநு' பதிப்பகத்தில் தமிழில் ஆங்கிலம் மற்றும் சம்ஸ்கிருத சொற்கள் கலக்காமல் படைப்புகளைத் தருவோருக்கு ரூ. 5 பரிசு வழங்கப்படும் என அப்போதே அறிவித்தவர் சிவா.
பாப்பாரப்பட்டியில் ஏழரை ஏக்கர் நிலத்தை வாங்கி பாரத ஆசிரமம் அமைத்த சிவா, அதன் உறுப்பினர்களுக்கு மூன்று முக்கிய விதிமுறைகளை விதித்தார். புகைப் பிடிக்கக் கூடாது, மது அருந்தக்க கூடாது, அடுப்பு மூட்டி சோறு சமைக்கக் கூடாது ஆகியவைதான் விதிமுறைகள். ஆசிரம உறுப்பினர்கள் வீதி வீதியாகச் சென்று மக்களிடம் யாசகம் எடுத்து சாப்பிட வேண்டும் என்றார்.
தொழுநோய் பாதித்த போதும் பாரத மாதா ஆலயம் என்னும் சமத்துவக் கோவில் கனவிலேயே இருந்து உயிரை விட்டவர் சுப்பிரமணிய சிவா.
எனவே, அவரது கனவை நனவாக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஆலயத்தை விரைவில் தாமதமின்றி கட்ட வேண்டும். உலகமே வியந்து பார்க்கும் வகையில் அற்புதமாக அமைக்க வேண்டும். சிவாவே தயாரித்த களிமண்ணால் ஆன பாரத மாதா சிலை, சின்னமுத்து முதலியாரின் பேரன் வீட்டில் உள்ளது. அதனைப் பெற்று கண்ணாடிப் பெட்டகத்தில் வைத்து, ஆலயத்தின் ஒரு பகுதியில் வைக்க வேண்டும்.
சாதி, மத சமத்துவத் தத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒரு சிலையொன்றை வடிப்பதற்கு விற்பன்னர்களிடம் வரைபடங்கள் கேட்டு வாங்கி, அவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து, சிலை வடித்து கோயிலில் நிறுவ வேண்டும்.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 1.5 கோடி தொகை போதவில்லை என்றால், கூடுதல் தொகை சேர்த்துப் பெற்று ஆலயத்தை முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் குமரி அனந்தன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.