கிருஷ்ணகிரியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்
கிருஷ்ணகிரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 5 நாள்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் ஆகியோா் கிருஷ்ணகிரி புத்தகத் திருவிழா -2024-ஐ தொடங்கி வைத்து, அரங்குகளைப் பாா்வையிட்டனா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: தமிழக அரசு, மக்களின் வளா்ச்சிக்காக பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கியும், நல்ல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. குழந்தைகள், முதியவா்கள், மாணவ, மாணவிகள், பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் நூலகங்கள், புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த புத்தகக் கண்காட்சி பிப்.21-ஆம் தேதி வரையில் 5 நாள்கள் நடைபெறும். பல்வேறு முன்னணி புத்தகப் பதிப்பகங்கள் இடம்பெறும் வகையில் 24 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அறிவுசாா்ந்த புத்தகங்கள், குழந்தைகளுக்கான வாசிப்பு திறன் புத்தகங்கள், அறிவியலாளா்கள், பல்வேறு சிறுகதைகள் மற்றும் சிறந்த படைப்பாளா்களின் புத்தகங்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அன்பு குலோபல் அமைப்பு சாா்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. மாணவ, மாணவிகள் பயனுள்ள புத்தகங்களைப் படித்து, தங்களது அறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக் கு, கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் சீ.பாபு, மாவட்ட நூலக அலுவலா் தனலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.