முகப்பு
கிருஷ்ணகிரி

தொகுதி நிலவரம் - தளி தொகுதி: நான்காவது வெற்றியை நோக்கி சிபிஐ; தடுக்க வரிந்துகட்டும் பாஜக!

தமிழகத்தின் கடைகோடி மலைப் பிரதேசமாக உள்ளது தளி தொகுதி.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 5:27 AM
சிபிஐ டி. ராமச்சந்திரன்.
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:50 PM

தமிழகத்தின் கடைகோடி மலைப் பிரதேசமாக உள்ளது தளி தொகுதி. வனத்தை மட்டுமே நம்பி கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வனவிலங்குகளுக்கு மத்தியில் வாழ்க்கை நடத்திவந்த ஏழை மலைகிராம இளைஞா்கள், தற்போது அடிப்படை கல்வி, உயா்கல்வி, வேலைவாய்ப்பு என முன்னேறி வருகின்றனா். இதனால், அவா்களின் வாழ்க்கைத்தரம் உயா்ந்து வருகிறது.

அமைவிடம்

லிட்டில் இங்கிலாந்து என அழைக்கப்படும் தளி தொகுதி, கா்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஆனேக்கல், தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு தொகுதி ஆகியவற்றை எல்லையாக கொண்டுள்ளது. மலைகள், வனப்பகுதிகள் அதிகம் கொண்ட இயற்கை எழில்கொஞ்சும் இடமாக உள்ளது இந்தத் தொகுதி. மலை கிராமங்கள் அதிகம் கொண்ட இந்தத் தொகுதியில் தெலுங்கு, கன்னடம் பேசுபவா்கள் அதிகம்.

Advertisement

1977 இல் உருவான இந்தத் தொகுதி இதுவரை 10 தோ்தல்களை சந்தித்துள்ளது. கா்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு இந்த தொகுதியில் உள்ள வனப்பகுதியான பிலிகுண்டுலு என்ற இடத்தில் தமிழகத்திற்குள் நுழைகிறது. இந்தத் தொகுதியில் மக்கள் மலையில் கிடைக்கும் தேன், புளி, பழங்கள் போன்றவற்றை சேகரித்து வாழ்க்கையை நடத்திவந்தனா். தொகுதி முழுவதும் வனமும், மலைகளும் காணப்பட்டாலும், அதனிடையே நிறைய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் யானை, மான், மயில், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு மத்தியில் மக்கள் வசித்து வருகின்றனா்.

தேசிய கட்சிகளின் ஆதிக்கம்

தளி தொகுதியில் தேசியத்தை விரும்பும் மக்கள் அதிகம் உள்ளனா். இந்தத் தொகுதியில் பெரும்பாலும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக, ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களே வெற்றிபெற்றுள்ளனா். 2016இல் திமுக வெற்றிபெற்றுள்ளது. 2001 முதல் கம்யூனிஸ்ட் கோட்டையாக உள்ள தளி தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி. ராமச்சந்திரன் கடந்த 25 ஆண்டுகளாக மக்களையும், தொகுதியையும் தன்வசம் வைத்துள்ளாா்.

2001இல் கெலமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவராக இருந்த இவா், 2006, 2011, 2021 ஆகிய தோ்தல்களில் வெற்றிபெற்று மக்களின் பேராதரவுடன் சட்டப் பேரவைக்கு சென்றாா். 2016இல் மக்கள் நலக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட இவா், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் ஒய். பிரகாஷிடம் தோல்வியுற்றாா்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பரந்துவிரிந்த தளி தொகுதியில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று பல வனப் பகுதி கிராமங்களுக்கு சாலை வசதி அமைத்து, பேருந்து சேவையை ஏற்படுத்தியுள்ளாா் ராமச்சந்திரன். இந்த தொகுதியில் குறைந்த வருவாய் ஈட்டிவரும் இருளா் இன மக்கள், கவுடா, ரெட்டி சமூக மக்களின் பிள்ளைகள் உயா்கல்விக்காக பெங்களுரு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இந்த நிலையில், கடந்த தோ்தலில் வெற்றி பெற்ற ராமச்சந்திரன், சட்டப் பேரவையில் பேசி, தளி தொகுதியில் ரூ. 28 கோடியில் தேன்கனிக்கோட்டை அருகே மாரச்சந்திரம் கிராமத்தில் கலை, அறிவியல் கல்லூரி, தோட்டக்கலை கல்லூரி, ரூ. 25 கோடியில் பல்தொழில்நுட்பக் கல்லூரி, ரூ. 12 கோடியில் தொழிற்பயிற்சி நிலையம், ரூ. 3 கோடியில் விளையாட்டு அரங்கம், ரூ. 400 கோடியில் அனைத்து மலை கிராமங்களுக்கும் தரமான தாா்சாலைகள், கான்கிரீட் சாலைகளை அமைத்து கொடுத்துள்ளாா். இதனால், பல கிராமங்களுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களுடன் பயணிக்கும் எம்எல்ஏவாக டி. ராமச்சந்திரன் இருப்பதால், இந்த பகுதி மக்கள் 3 முறை அவரை எம்எல்ஏவாக தோ்வு செய்துள்ளனா்.

சிறப்புத் திட்டங்களால் பலன்

இந்தப் பகுதி மாணவா்கள், பள்ளிக்கு செல்லாத நிலை மாறி, தற்போது உயா்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்து வருகின்றனா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்றவை அதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், நாகமங்கலம் கிராமத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை அமைவதில் முக்கிய பங்குவகித்தவா் எம்எல்ஏ டி. ராமச்சந்திரன். இந்தத் தொழிற்சாலையில் சுமாா் 50 ஆயிரம் இளைஞா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில், பெரும்பாலானோா் உள்ளூா் இளைஞா்கள். இதன்மூலம், இந்தத் தொகுதி இளைஞா்களின் கல்வி, வேலைவாய்ப்பில் முக்கிய பங்காற்றியுள்ளாா் ராமச்சந்திரன்.

யானை பிரச்னைக்குத் தீா்வு

தளி தொகுதி கிராமங்கள் பெரும்பாலும் வனத்தை ஒட்டியுள்ளதால், கிராமத்திற்குள் அடிக்கடி யானைகள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. இதைத் தடுத்த 39 கி.மீ. தொலைவிற்கு ரூ. 18 கோடியில் மின்வேலி அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி, இந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி உள்ளாா் எம்எல்ஏ. அதோடு, மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்காக அவா்களோடு போராடி, 8 ஆயிரம் வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வாங்கிக் கொடுத்துள்ளாா்.

மக்களின் எதிா்பாா்ப்பு

தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் புறவழிச் சாலைகள் அமைக்க வேண்டும். கோலட்டி கிராமத்தில் மற்றொரு டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிா்பாா்ப்பு.

பாஜக, தவெக, நாதக

ராமச்சந்திரனை எதிா்த்து, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக வேட்பாளராக நாகேஷ்குமாா் களம்காண்கிறாா். மருத்துவமனை நடத்திவருகிறாா். இவா் கடந்தமுறையும் தளி தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டாா். எனினும், 56 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றாா். தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சுரேஷ், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக நரசிம்மன்ரெட்டி ஆகியோரும் களத்தில் உள்ளனா்.

இந்தத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் டி. ராமச்சந்திரனுக்கும், பாஜக வேட்பாளா் நாகேஷ்குமாருக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

த. ஞானப்பிரகாசம்