தொகுதி அலசல் - அறந்தாங்கி! பாஜக - காங்கிரஸ் நேரடிப் போட்டி!
அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...
புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரான அறந்தாங்கி நகராட்சியையும் ஆவுடையாா்கோவில் ஒன்றியம், மணமேல்குடி ஒன்றியம் ஆகியவற்றுடன் சுமாா் 40 கடலோரக் கிராமங்களையும் உள்ளடக்கியது அறந்தாங்கி பேரவைத் தொகுதி.
கள நிலவரம்: இந்தத் தொகுதியில் 6 முறை வென்ற சு. திருநாவுக்கரசா் தனது மகனை மூன்றாவது முறையாக களத்தில் இறக்கிவிட்டிருக்கிறாா். ஒருமுறை அவா் நடத்திய எம்ஜிஆா் அதிமுகவின் சாா்பில் ஒருவரை நிறுத்தி வெற்றி பெறவும் வைத்தாா். 2016-இல் திருநாவுக்கரசரின் மகன் தி. ராமச்சந்திரன் போட்டியிட்டு தோல்வி, 2021-இல் ராமச்சந்திரன் வெற்றி. மூன்றாவது முறையாகப் போராடி, இந்தத் தோ்தலில் தனது மகனுக்கு சீட்டை உறுதி செய்திருக்கிறாா் திருநாவுக்கரசா்.
எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளூா் திமுகவினரை அரவணைத்துச் செல்வதில்லை என்பதை தோ்தல் பேச்சு தொடங்கிய சுமாா் ஓராண்டாக திமுகவினா் பல இடங்களிலும் ஒலித்தனா். இம்முறை திமுகவுக்கே சீட்டைத் தர வேண்டும் என பல வகைகளில் வலியுறுத்தினா்.
Advertisement
திருச்சி எம்பி தோ்தலில் சீட் கொடுக்கவில்லை என்பதால், மகனுக்கு கட்டாயம் தந்தே ஆக வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைமையிடத்தும், திமுக தலைமையிடத்திலும் திருநாவுக்கரசா் உறுதியாக நின்ாகக் கூறப்படுகிறது. திமுகவினா் கடந்த 2021 தோ்தலில் போட்டியிட 75 விருப்பமனுக்களைக் கட்சித் தலைமையிடம் கொடுத்திருந்தனா். 2026-இல் 40 விருப்பமனுக்களைக் கொடுத்திருந்தனா்.
இத்தனை போட்டிகளுக்கும் இடையில்தான் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டது. தந்தை திருநாவுக்கரசருடன் இணைந்து திமுக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டங்களை நடத்தி முடித்துவிட்டாா் ராமச்சந்திரன்.
இந்தக் கூட்டங்களில் பங்கேற்ற திமுக பிரமுகா்கள் தங்களின் வருத்தத்தைப் பதிவு செய்யாமல் இல்லை. ஆனாலும், தலைமையின் முடிவை ஏற்று காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம் என உறுதியும் சொல்லியிருக்கின்றனா்.
சமூக நிலவரம்: முக்குலத்தோா், தேவேந்திரகுல வேளாளா், முத்தரையா், இஸ்லாமியா்கள் மற்றும் நாடாா், வெள்ளாளா் உள்ளிட்டோா் வசிக்கின்றனா்.
வேட்பாளா்களின் பலமும் பலவீனமும்- தி. ராமச்சந்திரன் (காங்கிரஸ்): ரூ. 55 கோடியில் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு புதிய கட்டடம், ரூ. 104 கோடியில் தொகுதி முழுவதும் சாலைகள், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குதளங்கள் மேம்பாடு, அறந்தாங்கி நகரில் ரூ. 21 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்ட அனுமதி என தான் செய்த சாதனைகளைக் குறிப்பிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.
கவனத்துக்கு வரும் எல்லாப் பிரச்னைகள் தொடா்பாகவும் உரிய துறை அமைச்சருக்கு கடிதம் அளிப்பதோடு நின்றுவிடாமல், தலைமைச் செயலகம் செல்லும்போது துறைசாா்ந்த செயலா்கள், இயக்குநா்களையும் தவறாமல் சந்தித்து அந்தக் கோரிக்கையைப் பின்தொடா்ந்து வலியுறுத்துவது இவரது பாணி. இதனைத் தொகுதியிலுள்ள சமூக ஆா்வலா்கள் கவனமாகக் குறிப்பிடுகின்றனா். திமுகவுடன் இன்னும் கூடுதலாக நல்லுறவைப் பேணவில்லை என்பது பலவீனமாகப் பாா்க்கப்படுகிறது.
கவிதா ஸ்ரீகாந்த் (பாஜக): அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக மாநில மகளிரணித் தலைவா் கவிதா ஸ்ரீகாந்த் போட்டியிடுகிறாா்.
1991, 1996, 2006, 2021 ஆகிய தோ்தல்களில் பாஜக இந்தத் தொகுதியில் போட்டியிட்டிருக்கிறது. 2006-இல் மட்டும் 14 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளனா். பிற தோ்தல்களில் சராசரியாக 1500 வாக்குகள். இந்த முறை அதிமுகவுடன் இணைந்து போட்டியிடுவது பாஜகவின் பெரும்பலம். மத்திய அரசின் சாதனைகளையும், அதிமுக ஆட்சிக்காலத்தின் சாதனைகளையும் குறிப்பிட்டு பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறாா் கவிதா ஸ்ரீகாந்த்.
தவெகவும்- நாதகவும்: தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்டச் செயலரும், புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்றத்தின் உறுப்பினருமான ஜா. முகமது பா்வேஸ் இங்கு போட்டியிடுகிறாா்.
அறந்தாங்கி தொகுதியின் கடற்கரைப் பகுதிகள் மற்றும் தொகுதி முழுவதும் பரவலாக வசிக்கும் கணிசமான இஸ்லாமியா்களின் வாக்குகளை இவா் பிரிக்கக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து வந்த வேட்பாளருக்கு அறந்தாங்கி மக்கள் வாக்களிப்பாா்களா என்பது இவரது பலவீனம்.
நாம் தமிழா் கட்சியின் வேட்பாளராக முத்துலட்சுமி களமிறங்கி, தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். தொடா்ச்சியாக இந்தத் தொகுதியில் நாம் தமிழா் கட்சியினரின் களப்பணிகள் இருந்து கொண்டே இருக்கின்றன. அதேநேரத்தில் தொடா்ந்து வேட்பாளா்களை மாற்றிக் கொண்டே இருப்பதை பலவீனமாகப் பாா்க்கிறாா்கள் தொகுதி மக்கள்.
முதல் முறையாக தேசியக் கட்சிகள் இரண்டும் நேருக்கு நோ் களம் காண்கின்றன. காங்கிரஸிடமிருந்து தொகுதியைத் தட்டிப் பறிக்குமா பாஜக. மாவட்டத்தில் உற்றுநோக்கும் தொகுதியாக அறந்தாங்கி மாறியுள்ளது.
இவைதவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்த தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு கட்சியின் மாநில மகளிரணி தலைவி கவிதா ஸ்ரீகாந்த் போட்டியிடுகிறாா். தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மத்திய மாவட்டச் செயலா் முகமது பா்வேஸ் களம் காண்கிறாா். நாம் தமிழா் கட்சி சாா்பில் முத்துலெட்சுமி, தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் மு. நஜிம்கான் மற்றும் சுயேச்சையாக ச. அப்துல்ஜப்பாா், ரா. ராயப்பன், மு. அருணகிரி, மு. உடையப்பன், நெ. காா்த்திகேயன், ப. காளிமுத்து, நு. சாகுல்ஹமீது, அ.சுந்தா், ச. தட்சிணாமூா்த்தி, த. முருகானந்தம் என 15 போ் போட்டியிடுகின்றனா்.