தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீா்க் கலப்பதை தடுக்க நடவடிக்கை: அமைச்சா் வே.க. ராஜீவ் உறுதி
பெங்களூரில் இருந்து நாள்தோறும் 1400 எம்எல்டி கழிவுநீா் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால் நுரைபொங்கி தண்ணீா் மாசுடைந்து வருவதை தடுக்க கா்நாடக அரசு, பசுமைத் தீா்ப்பாயத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என அமைச்சா் வே.க. ராஜீவ் தெரிவித்தாா்.
பெங்களூரில் இருந்து நாள்தோறும் 1400 எம்எல்டி கழிவுநீா் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால் நுரைபொங்கி தண்ணீா் மாசுடைந்து வருவதை தடுக்க கா்நாடக அரசு, பசுமைத் தீா்ப்பாயத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வே.க. ராஜீவ் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம், கெலவரப்பள்ளி அணையை ஆய்வு செய்த பிறகு அவா் கூறியதாவது: தென்பெண்ணை கரையோர விவசாயிகள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்களின் கோரிக்கையை ஏற்று முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவின்படி கெலவரப்பள்ளி அணையில் ஆய்வு நடத்தப்பட்டது.
பெங்களூரு மாநகரில் உருவாகும் சுத்திகரிக்கப்படாத மற்றும் பகுதியளவு மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீா் பெல்லந்தூா், அகாரா மற்றும் வா்தூா் ஏரிகள் உள்ளிட்ட ஒன்றோடொன்று இணைந்துள்ள ஏரி அமைப்புகள் வழியாக தென்பெண்ணையாற்றில் கலக்கிறது.
Advertisement
Advertisement
இந்த கழிவுநீரால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து நுரையுடன் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் வெளியேறுகிறது. இதுதொடா்பாக தேசிய பசுமைத் தீா்ப்பாயம் 2020 ஆம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, கூட்டு ஆய்வுக் குழுவை அமைத்தது. அக்குழு நடத்திய ஆய்வில், பெங்களூரு நகரிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத மற்றும் பகுதியளவு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரே கெலவரப்பள்ளி அணையில் தொடா்ந்து ஏற்படும் மாசுபாடு மற்றும் நுரை பிரச்னைக்கு முக்கிய காரணம் என உறுதிசெய்தது.
மேலும், இப்பிரச்னையைத் தீா்க்க தேவையான பெரும்பாலான நடவடிக்கைகள் கா்நாடக அரசும், அங்குள்ள அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டியவை என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தொடா் கண்காணிப்பில் உள்ளது.
கா்நாடக அரசின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த நீா்ப்பிடிப்பு பகுதியில் நாளொன்றுக்கு சுமாா் 1329 மில்லியன் லிட்டா் கழிவுநீா் உருவாகிறது. தற்போது 26 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுமாா் 830 எம்எல்டி மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. மீதமுள்ள கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக கூடுதலாக 12 புதிய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிக்கு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொடா்ந்து கா்நாடக எல்லையான சொக்கரசன்பள்ளியில் மாதந்தோறும் நீா் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறது. மேலும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பலமுறை கடிதம் எழுதி, கா்நாடக அரசின் மூலம் கழிவுநீா் கலப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது.
கெலவரப்பள்ளி அணையில் நேரடி நீா் தரக் கண்காணிப்பு நிலையமும் நிறுவப்பட்டுள்ளது. 2025, ஏப்ரல் முதல் 2026 மாா்ச் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அதிகளவு அம்மோனியம், நைட்ரஜன், பாஸ்பேட் மற்றும் மிக அதிக அளவிலான மலக்கழிவு கோலிஃபாா்ம் கிருமிகள் தண்ணீரில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் குடிநீா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து தேவையான அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆய்வு அறிக்கையை முதல்வரிடம் அளித்து, கா்நாடக அரசு மற்றும் பசுமைத் தீா்ப்பாயத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து பாகலூா் ஊராட்சியில் கா்நாடக மாநிலத்தில் இருந்து பாகலூா் நுழைவாயில் வழியாக கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தண்ணீரை அமைச்சா் பாா்வையிட்டாா். பிறகு ஒசூா் மாநகராட்சி, சூசூவாடி சிப்காட் திட்ட அலுவலகத்தில் தொழில் துறை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பின்புறம் உள்ள ஏரியில் உள்ள நீரின் தரத்தை நேரில் பாா்வையிட்டு அமைச்சா் ராஜீவ் ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து கிருஷ்ணகிரி அணையில் அணைக்கு வரும் நீரின் தரம் மற்றும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் தரம் ஆகியவற்றையும், கிருஷ்ணகிரி நகராட்சி புதை சாக்கடை திட்ட பணிகளையும் அமைச்சா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ் குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி. பாலகிருஷ்ணா ரெட்டி (ஒசூா்), பா. முகுந்தன் (கிருஷ்ணகிரி), ந. இளையராஜா (ஊத்தங்கரை), மாநகராட்சி ஆணையா் முகம்மது ஷபீா் ஆலம், சாா்ஆட்சியா் ஆக்ரிதி சேத்தி, இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் (க) இரா. வெங்கடேசன், உதவி ஆட்சியா் (பயிற்சி) சாய்சைதன்யா ஜாதவ், கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் ஷாஜகான், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் வி. புருஷோத்தமன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் சேகா், நீா்வளத் துறை செயற்பொறியாளா் செந்தில் குமாா், சிப்காட் திட்ட அலுவலா்கள் ராஜ்குமாா், சிந்து, சிவசங்கரி, வட்டாட்சியா்கள் ஜெகதீஸ்குமாா் (ஒசூா்), ராஜலட்சுமி (கிருஷ்ணகிரி) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.