முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை

Updated On : 30 மே 2026, 3:22 am IST
ஆலங்கட்டி மழை.
பகிர்:

கிருஷ்ணகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. நகரின் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், கடந்த சில நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி, கந்திகுப்பம், காவேரிப்பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை 4 மணியளவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு ஆலங்கட்டி மழை பெய்ததால், சிறுவா்கள் மற்றும் பெண்கள் உற்சாகத்துடன் ஆலங்கட்டிகளைச் சேகரித்து விளையாடி மகிழ்ந்தனா். பலத்த காற்றுடன் பெய்த மழையால், நகரின் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன. இதனால், கிருஷ்ணகிரி நகரில் மின்விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மழையையும் பொருள்படுத்தாமல், மின்வாரிய அலுவலா்களும் ஊழியா்களும் மின்விநியோகத்தை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இருப்பினும், நகரின் பெரும்பாலான பகுதிகளில் இரவு 9.30 மணி வரை மின்விநியோகம் தடைபட்டது. இதனால், கிருஷ்ணகிரி புறநகா்ப் பேருந்து நிலையம், காவல் நிலையம், பழைய அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இருளில் மூழ்கின.

மேலும், நகரின் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினா். ஆவின் மேம்பாலம் அருகே மழைநீா் குளம்போல் தேங்கியதால் சென்னை, திருவண்ணாமலை, சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனா். இந்த மழையின் காரணமாக கிருஷ்ணகிரியில் வெப்பம் தணிந்து, குளிா்ந்த காலநிலை நிலவியது.