முகப்பு
நாமக்கல்

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

பரமத்தி வேலூர் வட்டத்தில் ராஜா வாய்க்கால் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் வாடும்

Updated On : 23 ஜூலை 2018, 9:40 am IST
பகிர்:

பரமத்தி வேலூர் வட்டத்தில் ராஜா வாய்க்கால் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் வாடும் பயிர்களை காக்க ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆட்சியர் ஆசியா மரியம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருள் அரசு மற்றும் பொதுப்பணித் துறையினர் தலைமையில், விவசாயிகள் முன்னிலையில் ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜா வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் படுகையணை பகுதியில் இருந்து பாசனத்துக்காக ராஜா வாய்க்கால் பிரிக்கப்பட்டு நன்செய் இடையாறு வரை செல்கிறது. கொமராபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் ஆகிய வாய்க்கால்கள் இந்த ராஜா வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்கின்றன. இந்த வாய்க்கால்கள் பாசனத்தை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்களில்  பயிர் செய்யப்பட்டுள்ள நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, மஞ்சள், கோரை உள்ளிட்ட பயிர்கள் பாசனம் பெற்று வருகின்றன. ராஜா வாய்க்கால் தூர் வாரும் மற்றும் பராமரிப்புப் பணிக்காக வருடத்தின் 15 நாள்கள் மட்டும் தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் போதிய தண்ணீர் வரத்து இல்லாததால் ராஜா வாய்க்காலில் பாசனத்துக்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீர் பயன்பாட்டுக்காக மட்டும் ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் வாடும் பயிர்களைக் காக்க உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து பாசனத்துக்காக 7 மதகுகள் மூலம் 235 கன அடி தண்ணீரை  மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம்,  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருள் அரசு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கெளதமன், உதவி செயற் பொறியாளர் முரளி, இளம் பொறியாளர் வினோத்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். 
இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பொதுப்பணித்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறப்பால் ராஜா,  கொமராபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
மேலும் மாவட்ட ஆட்சியரிடம் பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே அளவீடு செய்த இடத்தில் தடுப்பணை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments