தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை எதிர்பார்த்த பலன் தருமா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தமிழகத்தில் பெயரளவில்தான் தொடங்கப்பட்டுள்ளது.
கூடுதலாக ஆள்சேர்ப்பு...
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பாக சிங்கப்பெண் அதிரடிப் படை உருவாக்கப்பட்டுள்ள நிலைவில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. காவல் துறையில் ஆள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், சிங்கப்பெண் அதிரடிப் படைக்கு காவலர்கள் மாற்றப்பட்டுள்ளது பிற காவலர்களின் பணிச் சுமையை அதிகப்படுத்துவதாக உள்ளது. எனவே, காவல் துறைக்கு கூடுதல் ஆள்களைத் தேர்வு செய்து, சிங்கப்பெண் படையை மேலும் பலப்படுத்தி குற்றச் சம்பவங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ராம், ஈரோடு.
Advertisement
Advertisement
மக்களின் ஆதரவு
ஊடகங்கள் உதவியுடனும், நேரடி மக்கள் சந்திப்பாலும் பாதுகாப்பு பெறும் முறைகளை மக்களுக்குச் சென்றடையச் செய்தால் இந்தத் திட்டம் வெற்றி அடையும். வெளியே தெரிந்தால் அவமானம், தலைக்குனிவு என்னும் மனப்பான்மை மாறி உடனடியாகச் சிங்கப்பெண் அதிரடிப் படையின் உதவியை நாடும் பழக்கம் மிகுந்த அளவில் வர வேண்டும். எந்த ஒரு திட்டமும் மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் இன்றி வெற்றி பெறாது. அனைவரும் எச்சரிக்கை உணர்வு, வேகம், சமயோசிதம் போன்ற உணர்வுடன் முன்வந்து சமுதாய நலனுக்காகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!
இரா. ரவிக்குமார், சென்னை.
மேம்படுத்த வேண்டும்
பொதுவாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை முடிவுக்கு கொண்டுவர தற்போது தமிழகத்தின் புதிய அரசால் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில் போதிய பெண் காவலர்கள், ரோந்து வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள மக்கள் கூடும் முக்கியமான பகுதிகளில் நள்ளிரவு நேர ரோந்துப் பணிகளில் இந்த அதிரடிப் படை சிறப்புடன் செயல்பட வேண்டும்.
பிரசன்னா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.
வழிகாட்டி!
தமிழக முதல்வரால், உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும் என உறுதியாக நம்பலாம். வழக்கமான காவல் துறையின் வேலைப்பளுவை இது குறைக்கலாம்; எந்த நோக்கத்துக்காக இந்த சிறப்புப் படை உருவானதோ, அதற்கான நல்ல பலனை எதிர்பார்க்கலாம்; வேறு மாநிலங்களில் இல்லாத, தமிழகத்தில் மட்டுமே உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை சீறிப் பாய்ந்து சமூக சீர்கேடுகளைக் களையட்டும். ஒட்டுமொத்த தேசத்துக்கும் வழிகாட்டியாகட்டும்.
வி. ரங்கநாதன், பொள்ளாச்சி.
அதிகார வரம்பு
சிங்கப்பெண் அதிரடிப் படை தொடங்கப்பட்டதுடன் மட்டும் நின்று விடாமல், செயல்படும் அமைப்பாக மாற வேண்டும். மிடுக்கோடு மக்கள் மத்தியில் செயல்படும் படையாகவும் மாற வேண்டும். சமூக விரோத சக்திகளுக்கு எதிராகச் செயல்படும் மின்னல் வேகப் படையாக மாறினால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். அவர்களுக்குள்ள அதிகார வரம்பும், அதைச் செயல்படுத்தும் விதமும் தெளிவாக வகுக்கப்பட வேண்டும். பெண்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதும், அவர்கள் பிரச்னையில் சிக்கும்போது அவர்களின் பயத்தைப் போக்கும் விதத்தில் செயல்படுவதிலும்தான் இந்த சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டதன் வெற்றி அமையும்.
எல்.ஆர். சாலமன், மயிலாடுதுறை.
சந்தேகமே...
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள், கொலை நிகழ்வுகள் இவற்றையெல்லாம் பார்க்கும் போது புதிதாக சிங்கப்பெண் அதிரடிப் படை என்பது எதிர்பார்த்த பலனைத் தருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு திட்டம் தொடங்கப்பட்டதன் நோக்கம் அதன் பெயரில் தெளிவாகத் தெரிகிறது. அந்த நோக்கத்தை முன்னிறுத்தி அந்த அமைப்பு செயல்படுமா? என்பதை நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.
அறிவிப்புகள் மட்டும் போதாது
பெண்கள் பாதுகாப்புக்கென தனியே எதுவும் தேவையில்லை. இருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்தினால் போதும். மேலும், தேவையான பணியாளர்களை நியமித்தல் மிக அவசியம். நிதி நெருக்கடி என்று கூறி போதிய ஊழியர்கள் இல்லாமல், எல்லா அரசுத் துறை நிர்வாகமும் திணறிக் கொண்டிருக்கிறது. குறைவான ஊதியத்தில் கடுமையான கட்டுப்பாட்டுடன் அனைத்துத் துறைகளுக்கும், மக்கள்தொகைக்கு ஏற்ப ஊழியர்களை பணியமர்த்தல் மிக அவசியம். வெறும் சட்ட அறிவிப்புகள் பலன் தராது. அதை நடைமுறைப்படுத்தும் மனிதவளம் எந்தத் துறையிலும் நிறைவாக இல்லை.
மாறன் தமிழரசி, மேல்பட்டி.
வளர்ச்சிக்கு உதவும்
இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள். பெண்கள் பலவீனமானவர்கள் என பெண்ணடிமைத்தனத்தைப் போற்றும் ஆண்களுக்கு இந்தத் திட்டத்தின் வாயிலாக அவர்களின் செயல்பாடு கண்டு பிரமிப்புடன் அண்ணாந்து பார்க்கிற நிலை உருவாகும். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் அச்சம் இல்லாமலும், சுதந்திரமாகவும் இருக்கிறோம் என்கிற உணர்வை பெண்கள் பெறுவார்கள். அதுவே நம் மகளிர் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பதாக அமையும்.
ப. கோவிந்தராசு, ஊத்தங்கால்.
பாதுகாப்பை வலுப்படுத்தும்
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் சிறந்த திட்டம். இதை மேலும் பயனுள்ளதாக மாற்ற ஏ.ஐ. தொழில்நுட்பம், ஸ்மார்ட் கண்காணிப்பு கேமராக்கள், கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் அவசர உதவி செயலிகள் என விரிவுபடுத்த வேண்டும். பெண்கள் வெளியே செல்லும்போது அவர்களின் கைப்பேசியில் விருப்பத்தின் அடிப்படையில் ஜிபிஎஸ் பாதுகாப்பு வசதி செயல்பட்டு, அவசர நேரத்தில் குடும்பத்தினருக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கும் அமைப்பையும் கொண்டுவரலாம்.
ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.
புதிய முன்னுதாரணம்
தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் பள்ளி, கல்லூரி, பணியிடம் மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான தொந்தரவுகளைத் தடுப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கக்கூடும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணங்களான சமூக மனப்பான்மை, பாலின சமத்துவமின்மை மற்றும் சட்ட விழிப்புணர்வு குறைபாடு உள்ளிட்டவற்றைக் களைய வேண்டும். அரசின் உறுதியான செயல்பாடும், காவல் துறையின் அர்ப்பணிப்பும் மற்றும் மக்களின் ஒத்துழைப்பும் இணைந்தால், இந்தத் திட்டம் பாதுகாப்பில் புதிய முன்னுதாரணத்தை உருவாக்கும்.
க. குமார், அரக்கோணம்.
ஒத்துழைப்பு
எல்லா இடத்திலும், எல்லா நேரங்களிலும் சிங்கப்பெண் படை காத்திருக்க முடியாது. தவறு நிகழும் இடங்களில் இருந்து முறையாக, சரியான தகவல்களை சிங்கப்பெண் படைக்கு நாம்தான் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் மட்டுமல்ல, பிறர் பாதிக்கப்படுவதைப் பார்த்தாலும் நாம் தகவல் தரலாம். நாம் முழுமையான ஒத்துழைப்பு தரும்போது மட்டுமே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் வெற்றி பெறும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக தனி மனித ஒழுக்கம் மிக முக்கியம். இதில் ஆண், பெண் வேறுபாடு இல்லை. ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் பாதுகாக்கும் பண்பை இளமை தொடங்கி கற்றுக் கொடுக்க வேண்டும்.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
விழிப்புணர்வு தேவை
பெண்களுக்கான பாதுகாப்பை முன்னிறுத்தி அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்து வருகின்றன. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் குறித்த விழிப்புணர்வு பள்ளி, கல்லூரிகள், தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் ஏற்படுத்துதல் அவசியமானதாகும். மொத்தத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள், குழந்தைகளுடன் பொது வெளியில் அச்சமின்றி நடமாட முடியும் என்கிற எண்ணத்தை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையில் பணியாற்றுபவர்கள் கொண்டுவந்தால், இந்தத் திட்டம் எதிர்காலத்தில் சிறப்பான வரவேற்பைப் பெறும்.
இராம. முருகன், காத்தான் விடுதி.
கேள்விக்குறியே...
தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை எதிர்பார்த்த பலன் தருமா என்றால் அது கேள்விக்குறியே. ஏற்கெனவே, பெண்கள் பாதுகாப்புக்கென்று தனிப் பிரிவுகள், ஹெல்ப்லைன் வசதிகள் என்று பல்வேறு வசதிகள் இருக்கின்றன. புதிதாக ஒரு சிங்கப் படை வந்து விட்டால் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு வந்துவிடும் என்று கூற முடியுமா? கோடிக்கணக்கான மனிதர்கள் வாழும் இடத்தில் எந்த அரசாலும் குற்றங்களை முழுமையாகத் தடுக்க முடியாது. இருக்கும் சட்டங்களின்மூலம் கடுமையான தண்டனை வழங்கினாலே போதும்.
அமிர்தநேயன், உடுமலைப்பேட்டை.
பெயரளவில் மட்டும்
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை நள்ளிரவு வரை ரோந்துப் பணியில் இருப்பதால், பெண் காவலர்களின் பணிச் சூழல், பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. இது போன்ற சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கும்போது மாவட்டத்தின் தலைமையிடத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைக்க வேண்டும். அது தனி அலுவலகமாக இயங்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் வெறும் பெயரளவில் செயல்பட்டால், தீவிர குற்றங்களைத் தடுக்க முடியாது. சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தமிழகத்தில் பெயரளவில்தான் தொடங்கப்பட்டுள்ளது.
ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.