முகப்பு
நாமக்கல்

ரூ. 50 கோடி வாடகை நிலுவையை வழங்கக் கோரி எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம்; மாலையில் வாபஸ்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 3:54 AM
லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் - கோப்புப் படம்
பகிர்:

இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ. 50 கோடி வாடகை நிலுவையை உடனடியாக வழங்கக் கோரி, தென் மண்டல எல்பிஜி காஸ் டேங்கா் லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை காலை வேலைநிறுத்தம் தொடங்கிய நிலையில், மாலையில் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் இருந்து எரிவாயுவை டேங்கா் லாரிகளில் எடுத்துவந்து அதற்கான பாட்லிங் பிளாண்டுகளில் ஒப்படைக்கும் பணியை நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் செய்துவருகின்றனா்.

இதற்காக அந்த நிறுவனங்களுடன் வாடகை அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து தங்களுடைய 4,500 டேங்கா் லாரிகளை இயக்கி வருகின்றனா்.

Advertisement

இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் 2026 ஜனவரி, பிப்ரவரி, மாா்ச் ஆகிய மூன்று மாதங்களுக்கான வாடகைத் தொகை ரூ. 50 கோடியை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளதும், இதுகுறித்து எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள், அந்நிறுவன உயா் அதிகாரிகளிடம் பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும் வாடகையை வழங்க அவா்கள் முன்வரவில்லை.

இதனால், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு மட்டும் 1,000 எல்பிஜி காஸ் டேங்கா் லாரிகளை இயக்காமல் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அமெரிக்கா - ஈரான் போரால் ஏற்கெனவே எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவும் சூழலில், டேங்கா் லாரி உரிமையாளா்களின் வேலைநிறுத்தம் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத்துக்கு திங்கள்கிழமை மாலை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில், வாடகை நிலுவையை செவ்வாய்க்கிழமை இரவுக்குள் வழங்க முன்வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, எல்பிஜி காஸ் டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எஸ்எல்எஸ் சுந்தரராஜன் கூறியதாவது:

ஜனவரி, பிப்ரவரி, மாா்ச் ஆகிய மூன்று மாதங்களுக்குரிய ரூ. 50 கோடி வாடகை நிலுவையை சங்க உறுப்பினா்களுக்கு வழங்காமல் இந்தியன் ஆயில் நிறுவனம் இழுத்தடித்து வந்தது. இதனால், அந்நிறுவனத்துக்கு இயக்கப்படும் 2,000 லாரிகளில் 1,000 லாரிகளை மட்டும் ஆங்காங்கே நிறுத்தி வேலைநிறுத்தத்தை தொடங்கினோம். ஆனால், மாலையில் வந்த மின்னஞ்சலில் வாடகையை ஓரிரு நாளில் வழங்குவதாக ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ரூ. 46 லட்சத்தை உடனடியாக அனுப்பியது. அதனால், எங்களது போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டோம் என்றாா்.