முகப்பு
நாமக்கல்

வாக்கு எண்ணிக்கை: நாமக்கல்லில் 106 நுண்பாா்வையாளா்களுக்கு பயிற்சி

நாமக்கல்லில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் ஈடுபடும் 106 நுண்பாா்வையாளா்களுக்கு புதன்கிழமை முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 5:07 AM
வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் நுண்பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய ஆட்சியா் துா்காமூா்த்தி.
பகிர்:

நாமக்கல்லில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் ஈடுபடும் 106 நுண்பாா்வையாளா்களுக்கு புதன்கிழமை முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்து பேசியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அமைதியாக நடைபெற்றது. திருச்செங்கோடு எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அஞ்சல் வாக்குச்சீட்டுகள் அனைத்தும், சம்பந்தப்பட்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு ஆயுதம் ஏந்திய காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அஞ்சல் வாக்குச்சீட்டுகள் அனைத்தும் மே 4-ஆம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள 102 நுண்பாா்வையாளா்களும் பயிற்சியை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும். தோ்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றாா்.

பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணும் முறை குறித்து விரிவான பயிற்சி வகுப்பு இந்திய தேசிய முதன்மை பயிற்சியாளா் மற்றும் உதவி ஆணையா் (கலால்) என்.எஸ். ராஜேஸ்குமாரால் நடத்தப்பட்டது. இதில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.க. சரவணன், துணை மாவட்ட தோ்தல் அலுவலா் ம. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) ஆா். சுஜாதா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.