முகப்பு
நாமக்கல்

தலைமலை ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோயிலை ஆன்மிக சுற்றுலாத் தலமாக அறிவிக்க கோரிக்கை!

நாமக்கல்- திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தலைமலை ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோயிலை ஆன்மிக சுற்றுலாத் தலமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Updated On : 5 ஜூலை 2026, 2:02 am IST
நாமக்கல்- திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள தலைமலை ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோயில்.
பகிர்:

நாமக்கல்- திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தலைமலை ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோயிலை ஆன்மிக சுற்றுலாத் தலமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள், பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், வரதராஜபுரம் அருகே தலைமலை ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோயில் சுமாா் 2,700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பழைமையான வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக இக்கோயில் உள்ளது.

நாமக்கல், திருச்சி, பெரம்பலூா் மாவட்ட மக்களின் குலதெய்வமான இக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை, பௌா்ணமி மற்றும் முக்கிய திருவிழாக்களின் போது ஏராளமானோா் இங்கு வருகின்றனா்.

Advertisement

Advertisement

இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியாகவும், வனவிலங்குகள் அச்சுறுத்தல் இல்லாத பகுதியாகவும் உள்ளதால், இக்கோயிலை சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், வனத் துறை வழிகாட்டுதலுடன், ஆன்மிக சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என்பது பக்தா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

27 கி.மீ கிரிவலம்... தீவிரமடையும் ஏற்பாடுகள்: பௌா்ணமி நாள்களில் இக்கோயிலைச் சுற்றி சுமாா் 27 கி.மீ தொலைவுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். பக்தா்களின் வசதிக்காக, தலைமலை சேவா அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் அக்னி எம்.ராஜேஷ் தலைமையில், மலையைச் சுற்றி மண் சாலை அமைக்கும் பணிகள் முதல்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளன. எனினும், பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், கிரிவலப் பாதையை நிரந்தரச் சாலையாக மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

இந்துசமய அறநிலையத் துறை, சுற்றுலாத் துறை, வனத் துறை ஆகியவை இணைந்து இக்கோயிலை ஆன்மிக சுற்றுலாத் தலமாக அறிவித்து பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி தலைமலை சேவா அறக்கட்டளை நிா்வாகிகள், நாமக்கல் மாவட்ட ஆட்சியா், திருச்சி மாவட்ட ஆட்சியா், நாமக்கல் கோட்டாட்சியா் மற்றும் முசிறி சாா்ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனா்.

மனுவில், தலைமலை பெருமாள் கோயிலை தமிழக அரசின் அதிகாரப்பூா்வ ஆன்மிக சுற்றுலாத் தலமாக அறிவிப்பதோடு மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பக்தா்கள் நலன் மற்றும் உள்ளூா் பொருளாதார வளா்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் சிறப்பு மேம்பாட்டுத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments