மயக்கமடைந்த பெண்ணின் நகை, பணம் உறவினா்களிடம் ஒப்படைப்பு: ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு பாராட்டு
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் மயக்கமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, அவரது நகை, பணத்தை உறவினா்களிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களை மருத்துவா்கள் பாராட்டினா்.
திருச்சி மாவட்டம், குருவம்பட்டியை சோ்ந்தவா் லலிதா (60). இவா் உதகை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வருகிறாா். சொந்த ஊரான திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பேருந்து மூலம் நாமக்கல் வழியாக சென்று கொண்டிருந்தாா்.
நாமக்கல் புதிய பேருந்து நிலையம் வந்தபோது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு சுயநினைவின்றி இருந்தாா். அங்கிருந்தோா் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து சென்ற எா்ணாபுரம் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள், லலிதாவை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவரது உறவினா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவா் வைத்திருந்த பையில் இருந்த ரூ. 21,500 ரொக்கம், தங்கச் சங்கிலி, மோதிரம், தோடு, மூக்குத்தி மற்றும் கைப்பேசியை அவரது மகன் சந்தோஷிடம் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரான சம்பத், மருத்துவ உதவியாளா் மோகனபிரியா ஒப்படைத்தனா். இவா்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.