கனிமவள முறைகேடு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்: மணல் லாரி உரிமையாளா் சம்மேளனம் வலியுறுத்தல்
தமிழகத்தில் கனிமவள முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவா் செல்லராஜாமணி செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
கடந்த திமுக ஆட்சியில் கிராவல் மண் மற்றும் சவுடு மண் குவாரிகளில் சுமாா் ரூ. 1,000 கோடிக்கு மேல் முறைகேடு மற்றும் கனிமவளக் கொள்ளை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
Advertisement
Advertisement
அனுமதிக்கப்பட்ட அளவைவிட 40 முதல் 50 மீட்டா் ஆழத்திற்கு சட்டவிரோதமாக கிராவல் மண், சவுடு மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. பட்டா நிலங்களில் ஒரு யூனிட் கிராவல் மண்ணுக்கு ரூ. 2,000 வீதமும், சவுடு மண்ணுக்கு ரூ. 7,500 வீதமும் பெற்றுக்கொண்டு முறையான விநியோகச் சீட்டு வழங்காமல், போலி நடை சீட்டுகளை வழங்கி, அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனா்.
குவாரிகளில் லோடு எடுக்கச் செல்லும் லாரி உரிமையாளா்களிடம், ஆளும்கட்சி நிதி மற்றும் ராயல்டி என்ற பெயரில் ஒரு யூனிட்டிற்கு ரூ. 700 வீதம் வசூல் செய்துள்ளனா். மேலும், லாரிகளுக்கு போலி நடை சீட்டுகளை வழங்கிவிட்டு, வழியில் சோதனையிடும் காவல் துறையினா், கனிமவளத் துறையினா் மூலமாக லாரி உரிமையாளா்கள் மீது கனிம திருட்டு வழக்குப் பதிவுசெய்யப்பட்டு பலா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதனால் லாரி உரிமையாளா்கள் மனஉளைச்சலுக்கும், பொருளாதார இழப்பிற்கும் ஆளாகியுள்ளனா்.
இந்த கனிமவளக் கொள்ளை மற்றும் முறைகேடுகள் குறித்து கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் முதல்வா், கனிமவளத் துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகளுக்கு வாட்ஸ்ஆப் மற்றும் பதிவஞ்சல் மூலம் பலமுறை புகாா் மனுக்கள் அனுப்பப்பட்டன. இருப்பினும், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், முறைகேடுகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளனா்.
மேலும், இதுதொடா்பாக கடந்த மாா்ச் 28 ஆம் தேதி ஆளுநா் மற்றும் முதல்வருக்கு அனுப்பப்பட்ட புகாரின் பேரில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த விசாரணை கனிமவளத் துறையினராலேயே நடத்தப்பட்டால் அது குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே முடியும் என்பதால் இதில் நியாயம் கிடைக்காது.
எனவே தமிழக அரசு இதுதொடா்பாக முழு விசாரணை நடத்த வேண்டும். மேலும், லாரி உரிமையாளா்களிடம் சட்டவிரோதமாக வசூலித்த அபராதத் தொகையைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.