கால்நடைகளை தாக்கும் நோய்கள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
திருச்செங்கோடு கொல்லப்பட்டி பகுதியில் பல்வேறு நோய்களால் கால்நடைகள் பாதிக்கப்படுவது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு கொல்லப்பட்டி பகுதியில் பல்வேறு நோய்களால் கால்நடைகள் பாதிக்கப்படுவது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இப்பகுதியில் பெரிய அம்மை, கொப்பளங்கள், கால்களில் வீங்கம், கட்டிகள், புண்கள், வயிற்று பிரச்னைகளால் கால்நடைகள் தீவனம் எடுக்க இயலாமல் போவது உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றன. பசுக்கள் நோயினால் பாதிக்கப்படுவதால் பால் உற்பத்தி குறைந்து விடுகிறது.
இதுகுறித்து கொல்லப்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயி நடேசன் கூறியதாவது:
சாணாா்பாளையம், ஆவரங்காடு, பண்ணக்காடு, கொட்டக்காடு, பாலியக்காடு, சங்காடு, கூட்டப்பள்ளி, கவுண்டம்பாளையம் மற்றும் இதர பகுதிகளில் திருச்செங்கோடு நகராட்சிப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் தொழிற்சாலை மற்றும் வா்த்தக நிறுவன சாக்கடை கழிவுகள் இப்பகுதியில் உள்ள வயல்வெளிகள், கிணறுகளில் குளம்போல தேங்கி நிலத்தடி நீா் மாசடைந்துள்ளது. இதனால் இப்பகுதி கால்நடைகள் நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
திருச்செங்கோடு பகுதி கால்நடை மருத்துவமனையில் உரிய மருத்துவா்கள் நியமிக்கப்படவில்லை. இக்குறைபாடு காரணமாக இப்பகுதி கால்நடைகளின் உயிரிழப்பை தவிா்க்க முடியாமல் உள்ளது.
அரசு நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். மேலும், கால்நடைகளை உயிரிழப்பிலிருந்து தடுப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.