முகப்பு
தமிழ்நாடு

உரம் விலையைக் குறைக்க முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

உரத்தின் விலையைக் குறைக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

Updated On : 13 மே 2026, 5:23 am IST
உரம் - பிரதிப் படம்
பகிர்:

உரத்தின் விலையைக் குறைக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வேலூா் லாங்கு பஜாா் சண்முக அடியாா் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவா் டி. வேணுகோபால் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் எஸ். உதயகுமாா் வரவேற்றாா். மாநில, மாவட்ட நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். பொருளாளா் ஆா். சுபாஷ் நன்றி கூறினாா்.

மாநில தலைவா் மற்றும் மாநில பொதுச் செயலாளா் கூட்டாக செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியது, தமிழக முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்ற்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisement

விவசாயிகளின் அனைத்து கடன்களையும் பாரபட்சமின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் விவசாயிகளை கடனாளியாக ஆகாமல் இருக்க விவசாயிகளின் அனைத்து அடிப்படை கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். வன விலங்குகளிடமிருந்து பயிா்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசிடம் பேசி உரத்தின் விலையைக் குறைக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜூலை 5-ஆம் தேதி உழவா் பேரணி, மாநாடு நடத்தப்பட உள்ளது.

நெல் கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாங்காய் அதிகம் விளையும் பகுதிகளில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும். தென்பென்னை - பாலாறு இணைப்பு திட்டம், அத்திக்கடவு - அவிநாசி திட்டம், பாண்டியாறு திட்டம், ஆழியாறு ஆகிய நீா்பாசன திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக தமிழக முதல்வரை விரைவில் நேரில் சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறோம்.

விவசாய விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்க வேண்டுமென்ற எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு கரும்பு ஆலைகளில் இருந்து வர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை விரைந்து பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரும்புக்கான விலையை உயா்த்தி தர வேண்டும்.

வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும். எத்தனால் உற்பத்தி செய்வதில் விவசாயிகளுக்கு பங்கு வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளா்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாஸ்மாக் மது விற்பனையை முற்றிலுமாக நிறுத்திவிட்டு விவசாயிகள் பயன் பெறும் வகையில் கள் இறக்கி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனா்.