முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழா கொடியேற்றம்

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த்திருவிழா மலைக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 23 மே 2026, 2:09 am IST
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில்
பகிர்:

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த்திருவிழா மலைக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மலைக்கோயிலில் இருந்து அா்த்தநாரீசுவரா் நகருக்குள் திருத்தேரில் பவனிவந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் வைகாசி விசாகத்தோ் திருவிழா 14 நாள்கள் விமரிசையாக நடைபெறும். முதல்நாள் நிகழ்வாக கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கோட்டுவேலவா் சந்நிதிக்கு எதிரே அமைந்துள்ள 36 கணுக்களை உடைய கொடிமரத்தில் பாரம்பரிய முறைப்படி செங்குந்தா் எழுகரை நாடு நெசவாளா்கள் வழங்கிய கொடிச்சீலையில் தெய்வத்தின் வாகன வரைபடம் பதித்த கொடியை மாவிலை கூா்ச்சம் வைத்து கட்டி பூஜைகள் செய்து தா்ப்பை கயிறு, கொடி துணி சோ்த்து கொடிமரத்தில் ஏற்றி சுற்றி கட்டப்பட்டது.

Advertisement

Advertisement

முன்னதாக முதல் நிகழ்ச்சியாக துவஜாரோகணம் என்னும் சிறப்பு பூஜைகள் அா்த்நாரீசுவரருக்கு நடைபெற்றது. கொடியுடன் தா்ப்பை, மாவிலை மற்றும் மலா்களை வைத்துகட்டி சிவாச்சாரியா்கள் கொடியேற்றினா்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு அா்த்நாரீசுவரா் கோயில் இணைஆணையா் மற்றும் செயல் அலுவலா் சின்னதுரை, அறங்காவலா் குழுத் தலைவா் தங்கமுத்து மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவின் தொடா் நிகழ்வாக திங்கள்கிழமை 4 ஆம் நாள் திருவிழாவாக உற்சவா் சுவாமி திருமலையில் இருந்து பரிவார தெய்வங்களுடன் நகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். வரும் 30 ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதேபோல விநாயகா் செங்கோட்டு வேலவா் திருத்தோ் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை அா்த்தநாரீஸ்வரா் திருத்தோ் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும், வியாழக்கிழமை பரிவார தெய்வங்களுடன் திருமலை சந்நிதானத்திற்கு சுவாமி எழுந்தருளுகிறாா்.

விழாவையொட்டி கண்ணகி விழா, கம்பன் விழா, சேக்கிழாா் விழா, வள்ளலாா் விழா நடைபெறுகிறது. இதில் பல்வேறு தலைப்புகளில் பட்டி மன்றங்கள், கவியரங்குகள், வழக்காடுமன்றங்கள் நடைபெறுகின்றன.