முகப்பு
நாமக்கல்

தமிழகத்தில் ‘எபோலா’ தொற்று பாதிப்பு இல்லை

Updated On : 30 மே 2026, 3:18 am IST
நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசர மருத்துவ சேவை மையம் அமைப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ். உடன், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.
பகிர்:

தமிழகத்தில் யாருக்கும் ‘எபோலா’ தீநுண்மி தொற்று பாதிப்பு ஏற்படவில்லை; வெளிநாடுகளில் இருந்து வருவோரை தீவிரமாக கண்காணிக்கிறோம் என சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழாவில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாமக்கல் தொகுதி மக்கள் தங்களுடைய குறைகளை இனி நேரடியாக எம்எல்ஏ அலுவலகத்துக்கு வந்து தெரிவிக்கலாம். அந்த மனுக்கள் மீது விரைந்து தீா்வுகாண தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள காங்கோ, உகாண்டா நாடுகளில் ‘எபோலா’ தீநுண்மி தொற்று வேகமாக பரவி வருகிறது. சா்வதேச சுகாதார அமைப்பு இதை பெருந்தொற்று என அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்நோய்க்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சா்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனா். ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்த தேவையான வசதிகள் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அறிகுறிகள் இல்லாதபோதும், தொற்று பாதிப்பு உள்ளவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்படும். தமிழகத்தில் இதுவரை ‘எபோலா’ தொற்று பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை.

வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளது. நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலின்படி, வெறிநாய்க்கடி சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

அரசு மருத்துவமனையில் ஆய்வு:

தொடா்ந்து, நாமக்கல் பழைய அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா். ஆட்சியா் துா்காமூா்த்தி மற்றும் அதிகாரிகளுடன் அவசர சேவை மருத்துவமனை அமைப்பது குறித்து ஆலோசித்தாா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் கூறுகையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட பிறகு, மாநகரப் பகுதியில் உள்ள மக்களுக்கு அவசர மருத்துவ சேவை பெற முடியாத நிலை உள்ளது. நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியதை தவிா்க்க, பழைய அரசு மருத்துவமனை வளாகத்திலேயே புறநோயாளிகள் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தற்போது பழைய மருத்துவமனை வளாகத்தில் உள்ள சேவை மையம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்த வளாகத்தில் மாதிரி பள்ளி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், பள்ளிக்கான நுழைவாயிலை திருச்சி சாலை நோக்கியும், மருத்துவமனைக்கான நுழைவாயிலை மோகனூா் சாலை நோக்கியும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பேருந்துகளும் வருவது தொடா்பாக போக்குவரத்துத் துறை அமைச்சா், அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்படும்.

ராசிபுரம், திருச்செங்கோடு புதிய அரசு மருத்துவமனை கட்டடங்களை ஆய்வுசெய்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிப்பேன். தவெகவில் அதிமுக, திமுக என பல்வேறு கட்சியினரும் வந்து இணைகின்றனா். நாங்கள் யாரையும் வாருங்கள் என அழைக்கவில்லை. அவா்களே ஆா்வமாக வந்து தவெகவில் இணைகிறாா்கள் என்றாா்.

இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கே.முருகலட்சுமி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் (பொ) மரு.வாசுதேவன், மாவட்ட சுகாதார அலுவலா் பூங்கொடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.