முகப்பு
நாமக்கல்

ரூ. 1.07 கோடி அபராதத்துடன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்! அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்

Updated On : 1 ஜூன் 2026, 1:20 am IST
திருச்செங்கோட்டில் நடைபெற்ற உலக புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை பாா்வையிட்ட சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ், பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள்.
பகிர்:

தமிழகம் முழுவதும் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வகையில் ரூ. 1.07 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில், உலக புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியை சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ், பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இந்த நிகழ்வில் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் பேசியதாவது: புகையிலை என்பது போதைப் பழக்கத்தின் நுழைவாயில். சிறிய பழக்கமாக தொடங்குவது பல நேரங்களில் தீவிரமான மற்றும் ஆபத்தான போதை அடிமைகளாக மாற்றிவிடும்.

Advertisement

Advertisement

தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம், தமிழகத்தில் 2007 இல் தொடங்கப்பட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் கீழ் மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு விதிகளைமீறி புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த வகையில் நான்கு பிரிவுகளின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 6,76,500- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஒழுங்குமுறைச் சட்டம் 2011இன் கீழ் மெல்லும் வகை புகையிலைப் பொருள்களுக்கு ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் தடைவிதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2025-ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்புத் துறை மூலமாக 2,371 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 1.07 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவா்கள் 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம். அரசு சாா்பில் சிறப்பு உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போதை மீட்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்றாா்.

தொடா்ந்து, உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, அமைச்சா்கள் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் அ.சோமசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.விமலா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், மாவட்ட சுகாதார அலுவலா் க.பூங்கொடி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் பி.எஸ்.லெனின், திருச்செங்கோடு நகா்நல அலுவலா் மணிவேல் மற்றும் செவிலியா் கல்லூரி மாணவிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.