முகப்பு
சேலம்

அரசு மருத்துவமனையிலிருந்துமாயமான வியாபாரி மர்மச் சாவு

காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மாயமான காய்கறி வியாபாரி சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 12 மே 2013, 5:34 am IST
பகிர்:

காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மாயமான காய்கறி வியாபாரி சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி சென்னை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சேலம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் சிராஜுதீன் (42). சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் காய்கறி கடை நடத்தி வந்தார். இவர் சில நாள்களுக்கு முன்பு உடலில் காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Advertisement

Advertisement

வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து அவர் காணாமல் போனார். பின்னர், சென்னை அரசு மருத்துவமனையில் சிராஜுதீன் வெள்ளிக்கிழமை உயிரிழந்து விட்டதாகவும், அவரது உடல் மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக் கூடத்தில் உள்ளதாகவும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் அவரது மனைவி பெனாசீர், வழக்குரைஞர் மாயன் ஆகியோர் கூறியது:

கந்து வட்டிக் கும்பலால் தாக்குதலுக்கு ஆளான சிராஜுதீனை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து திடீரென்று காணாமல் போனார்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை சிராஜுதீன் உயிரிழந்து விட்டதாகவும், அவரது சடலம் சென்னை அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக் கூடத்தில் இருப்பதாகவும் கந்து வட்டிக்காரர்கள் கூறினர்.

இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். சிராஜுதீனை கந்து வட்டிக் கும்பல் கடத்திச் சென்று கன்னங்குறிச்சி பகுதியில் வைத்து அடித்து துன்புறுத்தியதால், பலத்த காயமடைந்த அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள அரசு மருத்துவமனையில் போலியான பெயரைக் காப்பாளராகக் கொடுத்து சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.  எனவே, சிராஜுதீனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை சடலத்தை திரும்பப் பெறமாட்டோம் என்றனர்.

இதற்கிடையே, சிராஜுதீனை தாக்கியதாக அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மீது கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் வழக்குப் பதிவு செய்தார். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் சென்றனர்.

சிராஜுதீனின் சடலம் ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனைக்குப் பிறகு சேலம் கொண்டு வரப்படும் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.