முகப்பு
சேலம்

வாழப்பாடி அருகே கார் விபத்து: கள்ளக்குறிச்சி எம்.பி. உயிர் தப்பினார்

வாழப்பாடியை அடுத்த மின்னாம்பள்ளி அருகே கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் காமராஜ் (53)  (அ.தி.மு.க.)

Updated On : 25 பிப்ரவரி 2019, 9:00 am IST
பகிர்:

வாழப்பாடியை அடுத்த மின்னாம்பள்ளி அருகே கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் காமராஜ் (53)  (அ.தி.மு.க.) சென்ற வாகனம் கட்டுப்பாடு இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எம்.பி. காமராஜ் உயிர் தப்பினார்.
விழுப்புரம் மாவட்டம்,  கள்ளக்குறிச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் மருத்துவர் காமராஜ், சேலம் அண்ணா பூங்கா அருகே நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக கள்ளக்குறிச்சியிலிருந்து சேலம் நோக்கி அவரது காரில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தார்.
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாழப்பாடியை அடுத்த மின்னாம்பள்ளி தனியார் பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய கார்,  கட்டுப்பாடு இழந்து சாலைத் தடுப்பில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில்,  காரை ஓட்டிச் சென்ற மக்களவை உறுப்பினர் காமராஜ் இருக்கைப் பட்டை (சீட் பெல்ட்) அணிந்திருந்ததால், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவலறிந்த காரிப்பட்டி மற்றும் அம்மாப்பேட்டை போலீஸாரும்,  அதிமுக. வினரும் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, காமராஜை மீட்டு அப் பகுதியில் இயங்கும் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர்.
அவருடன் காரில் பயணித்த அவரது உதவியாளர் நாசர் மற்றும் உறவினர் ஒருவரும் லேசான காயமடைந்தனர்.  இந்த விபத்தால், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மக்களவை உறுப்பினர் காமராஜ் விபத்தில் சிக்கியது குறித்து தகவலறிந்த மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர். இளங்கோவன்,  சேலம் தொகுதி மக்களவை உறுப்பினர் பன்னீர்செல்வம்,  எம்.எல்.ஏ.க்கள் ஆத்தூர் சின்னதம்பி,  கெங்கவல்லி மருதமுத்து உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.