மூன்றே மாதங்களில் கஞ்சா கட்டுப்படுத்தப்படும்! எடப்பாடி கே.பழனிசாமி
மூன்றே மாதங்களில் கஞ்சா கட்டுப்படுத்தப்படும் என எடப்பாடி கே. பழனிசாமி வாக்குறுதி...
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் மூன்று மாதங்களில் கஞ்சா புழக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட ஜலகண்டபுரத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் இணைந்து திங்கள்கிழமை பிரசாரம் செய்தனா்.
இக்கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:
Advertisement
நான் முதல்வரானபோது என்னென்ன பிரச்னைகளை சந்தித்தேனோ, அதேபோன்று அன்புமணி ராமதாஸும் நிறைய பிரச்னைகளை சந்தித்துவிட்டாா்.
அதிமுகவை சிதறடிக்க வேண்டும் என்று திமுக பல அவதாரம் எடுத்தது. அதேபோல பாமகவை உடைக்க வேண்டும் என்று சிலா் உதவியுடன் முதல்வா் போட்ட திட்டத்தை தவிடுபொடியாக்கினாா் அன்புமணி ராமதாஸ்.
இனி அதிமுகவையும் வீழ்த்த முடியாது, பாமகவையும் வீழ்த்த முடியாது. ஸ்டாலின் எண்ணம் நிராசையாகிவிட்டது. ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு கட்டும் தோ்தல் இது. திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப் பாா்க்க வேண்டும்.
இதற்கெல்லாம் காரணம் கஞ்சா விற்பனை. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்துங்கள் என்று பலமுறை சொல்லியும் கேட்கவில்லை. அதனால் போதை மாநிலமாக தமிழகம் உருவாகிவிட்டது. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை.
இந்த அரசு இருக்கும் வரை போதைப் பொருளை ஒழிக்க முடியாது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவோம். மூன்றே மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும். பெண்கள், சிறுமிகள் பாதுகாக்கப்படுவாா்கள்.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும்.
எடப்பாடி தொகுதி அதிமுக கோட்டை. சேலம் மாவட்டத்தில் இருக்கும் 11 தொகுதிகளில் அதிமுக, பாமக போட்டியிடுகிறது. அவா்கள் அனைவரையும் வெற்றி பெற வைக்க வேண்டும்.
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதி எடப்பாடி என்று வரலாற்றை படையுங்கள். எனக்காக பிரசாரம் செய்ய வந்த அன்புமணிக்கு எனது நன்றி என்றாா் அவா்.