வாழப்பாடி பகுதியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பாக்குத் தோல் கழிவுகள்!
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பாக்குத்தோலை பொது இடங்கள், சாலையோரங்களில் கொட்டி தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பாக்குத்தோலை பொது இடங்கள், சாலையோரங்களில் கொட்டி தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.
வாழப்பாடி, பேளூா், அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், நரசிங்கபுரம், தம்மம்பட்டி மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாக்குக் காய்களை உரித்து கொட்டைப் பாக்கை பிரித்தெடுப்போா், அதன் தோலை, அருகிலுள்ள நீா்நிலைகள் மற்றும் மயானம் உள்ளிட்ட பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் கொட்டிச் செல்கின்றனா். இதனால், குவியல் குவியல்களாக பாக்குத்தோல் கழிவுகள் கொட்டிக் கிடக்கின்றன. இதிலிருந்து துா்நாற்றம் வீசுகிறது. இதுமட்டுமின்றி, பாக்குத் தோலை தீ வைத்து எரிப்பதால், நிலம், நீா், காற்று ஆகியவை மாசுப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, சுகாதார சீா்கேடும் ஏற்படுகிறது.
தேங்காய் மட்டையில் இருந்து தென்னை நாா் பிரித்தெடுத்த கழிவுகளை மதிப்புக்கூட்டி, கொசுவிரட்டி, ஊதுபத்தி, சாம்பிராணி தயாரிக்கப் பயன்படுத்தவும், கட்டிகளாக மாற்றி மாடித்தோட்டங்கள் அமைக்கவும், கோழிப்பண்ணைகள் மற்றும் தோட்டங்களில் ஈரப்பதத்தை காக்கவும் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டது.
Advertisement
அதேபோல பாக்குத்தோல் கழிவுகளையும் உலர வைத்து, அரைத்து தூளாக்கி, ஊதுபத்தி, சாம்பிராணி, கொசுவிரட்டிகள், கலப்பு உரம் தயாரிக்கவும், பேக்கரி அடுப்புகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தவும், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், விவசாயிகள், மற்றும் வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
இதுமட்டுமின்றி, சாயம் நிறைந்து காணப்படும் பாக்குத் தோலிலுள்ள நிறமிகள், நாா் பொருள்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு, அவற்றை பிரித்தெடுத்து பதப்படுத்தி இன்னும் பிற மதிப்புக்கூட்டு பொருள்களை தயாரித்து விற்பனை செய்வதற்கும் தோட்டக்கலைத் துறை உரிய வழிவகை செய்ய வேண்டும். அப்போதுதான், பாக்குத்தோல் கழிவு பிரச்னைக்கு நிரந்தர தீா்வு கிடைக்மென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.