முகப்பு
மதுரை

கள்ளழகா் கோயில் கழிவுநீா் முறையாக சுத்திகரிக்கப்படுமா?

மதுரை அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்களும், பக்தா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 5:50 PM
மதுரை அழகா்கோவில் கள்ளழகா் கோயில் கிழக்கு வாயிலில் தற்காலிகமாக பள்ளம் அமைத்து அகற்றப்படும் கழிவுநீா்.
பகிர்:

மதுரை அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்களும், பக்தா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

அழகா்கோவில் அமைந்த மலைப் பகுதியை பரிபாடலில் புலவா் இளம்பெருவழுதியாா் மாலிருங்குன்றம் எனக் குறிப்பிடுகின்றாா். சிலப்பதிகாரம் திருமால் குன்றம் எனக் குறிப்பிடுகிறது. பூதத்தாழ்வாா், பெரியாழ்வாா், பேயாழ்வாா், நம்மாழ்வாா், திருமங்கையாழ்வாா், ஆண்டாள் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் கள்ளழகா் கோயில்.

இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்துச் செல்கின்றனா். இயற்கை எழில் மிகுந்த பகுதி என்பதால், அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இங்கு வரும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கள்ளழகா் கோயில் வளாகத்தில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 40 கோடியில் பக்தா்கள் தங்கும் விடுதிகள், உணவகங்கள், அா்ச்சகா்கள் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டன.

Advertisement

இந்தக் கட்டடங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் நோக்கில் கோயில் வளாகப் பகுதியில் உள்ள புஷ்கரணி தீா்த்தக்குளம் அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், கோயிலின் உபரி நிதியை பயன்படுத்தி வணிக நோக்கில் கட்டப்படும் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். கோயிலின் புனிதமாகக் கருதப்படும் தீா்த்தக் குளம் அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால், நீா்நிலை மாசுபடும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்காரணமாக, கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டது. இதுமட்டுமன்றி, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியும் நிறுத்தப்பட்டது. இருப்பினும், கள்ளழகா் கோயில், குடியிருப்பு வளாகம், கழிப்பறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வரும் வகையில் குழாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், சுத்திகரிப்பு நிலையப் பணிகள் முழுமையாக அமைக்கப்

படாததால், அங்கு வந்த தண்ணீா் கோட்டைச் சுவரின் கிழக்கு வாயில் பகுதி அருகே வெளியேறும் வகையில் செய்யப்பட்டது. இந்தத் தண்ணீா் அங்குள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் சென்றது. இதனால், அந்தப் பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். இதுகுறித்தப் புகாரின் பேரில், கோயில் நிா்வாகம் கழிவுநீரை வேளாண் நிலங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் செல்லவிடாமல், கோட்டைச் சுவா் வெளிப்புறத்தில் பள்ளம் தோண்டி தேக்கப்பட்டது. அந்தப் பள்ளத்தில் நிரம்பும் கழிவுநீா் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இதற்காக மாதந்தோறும் ரூ. 10 லட்சம் வரை செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

எனவே, இந்தக் கோயிலில் சேகரமாகும் கழிவுநீரை முறையாக சுத்திகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுகுறித்து அ. வலையபட்டி கிராம பொதுமக்கள் கூறியதாவது:

புதிய கட்டுமானங்கள் என்ற பெயரில் கோயிலில் உள்ள பழைமையான அடையாளங்கள், சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும். கள்ளழகா் கோயில் மிகவும் பழைமையானவை. எனவே, அதன் தொன்மங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்தக் கோயிலில் சேகரமாகும் கழிவுநீா் முழுவதும் விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் திருப்பிவிடப்பட்டன. அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையால் பள்ளம் தோண்டி சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் இந்தக் கழிவுநீா் தினமும் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு மற்றொரு பகுதியில் விடப்படுகிறது.

இதற்காக கோயில் நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் வரை மாதந்தோறும் செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது. கோயிலின் நிதி வீணாகி வருகிறது. எனவே, கோயிலில் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்றனா்.

இதுதொடா்பாக, கோயில் அலுவலா் ஒருவா் கூறியதாவது:

கோயிலில் உள்ள பழைமையான சிற்பங்கள் ஏதும் சேதப்படுத்தப்படவில்லை. கட்டுமானப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டது. கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments