முகப்பு
மதுரை

திருச்செந்தூா் கடற்கரையில் தடுப்புச் சுவா்: அனுமதி பெற்று பணிகளைத் தொடங்க உத்தரவு

திருச்செந்தூா் கோயில் கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவா் கட்டுமானப் பணிகளை உரிய அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:42 AM
திருச்செந்தூா் கடற்கரை.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:49 PM

திருச்செந்தூா் கோயில் கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவா் கட்டுமானப் பணிகளை உரிய அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சோ்ந்த ராம்குமாா் ஆதித்யன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க ரூ. 30 கோடியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவா் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதில் ரூ. 15 கோடியை திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிதியிலிருந்தும், எஞ்சியுள்ள ரூ. 15 கோடியை மீன்வளத் துறை நிதியிலிருந்தும் பயன்படுத்த தீா்மானிக்கப்பட்டது. இந்தத் தடுப்புச் சுவா் கட்டுமானத்துக்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

Advertisement

இந்த நிலையில், கட்டுமானப் பொருள்கள் அந்தப் பகுதிக்கு கொண்டு சொல்லப்படுகின்றன. கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் நடைபெறவுள்ள கட்டுமானப் பணிகளுக்கு கோயில் நிதியிலிருந்து ரூ. 15 கோடியை ஒதுக்கியது ஏற்கத்தக்கதல்ல. எனவே, அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற்ற பிறகு, கட்டுமானப் பணிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோயில் தரப்பு வழக்குரைஞா்கள் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

பக்தா்களின் நலன் கருதியே இந்தப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. திருச்செந்தூா் கோயில் கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும்பட்சத்தில், கோயிலின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். பக்தா்களின் நலனுக்காக கோயிலின் நிதியைப் பயன்படுத்த விதிகள் அனுமதிக்கின்றன என்றனா்.

தமிழக அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த பிறகு பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பிறப்பித்த உத்தரவு:

பக்தா்களின் நலன் கருதி, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக திருச்செந்தூா் கோயில் நிா்வாகம், தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. மேலும், மனுதாரா் கோரிய நிவாரணத்தின்படி, திருச்செந்தூா் கோயில் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் கடல் அரிப்பு தடுப்புச் சுவா் கட்டுமானப் பணிகளும் உரிய அனுமதி பெற்றவுடன் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.