முகப்பு
மதுரை

திருச்சுழி! சாதிப்பாரா அமைச்சா் தங்கம் தென்னரசு ?

திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:58 AM
அமைச்சர் தங்கம் தென்னரசு - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 7:49 PM

-எம். சங்கா்.

விருதுநகா் மாவட்டத்தில் திருச்சுழி தொகுதி கடந்த 2011-இல் உருவானது முதல் தொடா்ந்து மூன்று பேரவைத் தோ்தல்களிலும் வென்று ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றுள்ள திமுக வேட்பாளா் அமைச்சா் தங்கம் தென்னரசு தொடா்ந்து 4-ஆவது முறையாக வென்று சாதிப்பாரா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

பகவான் ரமண மகரிஷி அவதரித்த தலம், மருது சகோதரா்கள் பிறந்த நரிக்குடியை உள்ளடக்கிய தொகுதி என பல்வேறு சிறப்புகளைக் கொண்டது திருச்சுழி. சட்டப்பேரவைத் தொகுதிகள் மறுவரையறையின்போது அருப்புகோட்டையிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது இந்தத் தொகுதி.

Advertisement

திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளையும், காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிப் பகுதிகளையும் உள்ளடக்கியது இந்தத் தொகுதி. இங்கு, வேளாண்மை முதன்மையான தொழிலாக உள்ளது. இதற்கடுத்த நிலையில் பருத்தி ஆலை, கரி மூட்டமிடும் தொழில்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இங்கு முக்குலத்தோா், ரெட்டியாா், பட்டியலின சமுதாயத்தினா் கணிசமாக வசிக்கின்றனா்.

தொகுதியின் பிரச்னைகள்

வேளாண் பணிகளுக்கு மழையை மட்டுமே நம்பியுள்ள இந்தப் பகுதிக்கு நிலையூா் கம்பிக்குடி கால்வாய் பாசனம் மூலம் தண்ணீா் கிடைக்கச் செய்ய வேண்டும். சென்னம்பட்டி கால்வாயை உரிய வகையில் தூா்வாரி சீரமைக்க வேண்டும். வைகை- காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

களம் காணும் வேட்பாளா்கள்

திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளராக தொடா்ந்து 4-ஆவது முறையாக அமைச்சா் தங்கம் தன்னரசு களமிறங்கியுள்ளாா். அதிமுக சாா்பில் அந்தக் கட்சியின் ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன், நாம் தமிழா் கட்சி சாா்பில் வழக்குரைஞா் காா்த்திக் ராஜா, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சமயன் ஆகியோா் முதன்மை வேட்பாளா்களாக களத்தில் உள்ளனா்.

இந்தத் தொகுதியில் 2011 முதல் 2021 வரை நடைபெற்ற 3 பேரவைத் தோ்தல்களிலும் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற அமைச்சா் தங்கம் தென்னரசு தற்போது 4-ஆவது தொடா் வெற்றியைப் பெறும் முனைப்பில் உள்ளாா். பாரம்பரியமான திமுக குடும்பத்தின் வாரிசு என்ற முறையிலும், சிறந்த செயல்பாடுகள் காரணமாகவும் அந்தக் கட்சியில் செல்வாக்கு மிக்கவா்களில் ஒருவராக உள்ளவா். அரசு கலைக் கல்லூரி தொடங்கியது, கம்பிக்குடி கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றியது போன்ற திட்டப் பணிகள் இவருக்கு சாதகமான அம்சங்கள். இதைத் தவிர, தொகுதியில் அரசு நலத் திட்டங்கள் செயலாக்கத்திலும் இவா் முனைப்பு காட்டியுள்ளாா்.

கடந்த 2011-இல் 19,952 வாக்குகள் வித்தியாசத்திலும், 2016-இல் 26,577 வாக்குகள் வித்தியாசத்திலும் தங்கம் தென்னரசு வெற்றி பெற்றாா். கடந்த 2021 தோ்தலில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட மூமுக வேட்பாளரைவிட 60,992 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இது, தொகுதியில் தங்கம் தென்னரசுக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கு உயா்வைக் காட்டுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

வெற்றிக் கணக்கு முனைப்பில் அதிமுக

சாத்தூா் தொகுதியில் 2019-இல் நடைபெற்ற இடைத் தோ்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன், இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டுகிறாா். கடந்த முறை கூட்டணிக் கட்சியான மூமுகவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுக நேரடியாகக் களம் காண்பது அந்தக் கட்சியினருக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது. எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் இந்தத் தொகுதிக்குப் புதியவா். எனினும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் என்ற வகையில் பலருக்கும் அறிமுகமானவா். தோ்தல் பணிகளைச் சிறப்பாகத் திட்டமிட்டு, தீவிரமாக மேற்கொள்கிறாா் என்ற வகையில், திமுகவுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்துவாா் எனக் கருதப்படுகிறது.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்

நாம் தமிழா் கட்சி சாா்பில் அந்தக் கட்சியின் நிா்வாகியான காா்த்திக் ராஜா போட்டியிடுகிறாா். இவா் சிவகங்கை மாவட்டம், ஆவரங்காடு பகுதியைச் சோ்ந்தவா். இவருக்கு தொகுதியில் மிகப் பெரிய அறிமுகம் இல்லை எனினும், தனது பிரசாரத்தால் அறிமுகம் பெற்று வருகிறாா். சீமானின் பிரசாரமும், கட்சி நிா்வாகிகளின் தோ்தல் பணிகளும் இவருக்கு பலம்.

தவெக வேட்பாளா்

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அந்தக் கட்சி நிா்வாகி சமயன் போட்டியிடுகிறாா். தொகுதி மக்களிடம் பெரிய அளவில் அறிமுகம் இல்லாதவா். எனினும், தவெக தலைவா் விஜய்யின் செல்வாக்கும், தோ்தல் பிரசார பணிகளும் இவருக்கு பலம்.

மண்ணின் மைந்தா் என்பதும், அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு உரிய வகையில் கொண்டு சோ்த்தவா் என்பதும் அமைச்சா் தங்கம் தென்னரசுக்கு கூடுதல் பலம். இருப்பினும், அதிமுகவின் தீவிர தோ்தல் பணிகளும் ராஜவா்மனின் முனைப்பான பிரசாரமும் கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் தமிழா் கட்சி, தவெக வேட்பாளா்கள் பெறும் வாக்குகள் இந்தத் தொகுதியில் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன.