மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
மதுரை சித்திரைத் திருவிழாவின் 8- ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
இந்தக் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சுந்தரேசுவரா் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வரும் நிகழ்வு நடைபெறுகிறது.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
Advertisement
மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் மலையத்துவ ராஜனுக்கு மகளாகப் பிறந்த இளவரசி மீனாட்சிக்கு அரசியாக பட்டம் சூட்டியதை குறிக்கும் வகையில் இந்த ஐதீக விழா நடைபெற்றது.
பட்டாபிஷேகம்:
பட்டாபிஷேகத்தை முன்னிட்டு, அம்மன் சந்நிதியில் உள்ள ஆறுகால் பீட மண்டபத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினாா். இதையடுத்து, ராயா் கிரீடம் எனப்படும் வைரக் கிரீடம் அனுக்ஞை விநாயகா் சந்நிதியிலிருந்து மேளதாள வாத்திய முழக்கத்துடன் எடுத்துவரப்பட்டது. பின்னா், வெள்ளி செங்கோல் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடா்ந்து, கிரீடம், செங்கோலுக்கு புனித நீா் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து, மீனாட்சி அம்மனுக்கு ராயா் கிரீடம் அணிவிக்கப்பட்டு, செங்கோல் ஒப்படைக்கப்பட்டு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், மீனாட்சி அம்மனுக்கு வேப்பம் பூ மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து, மீனாட்சி அம்மனிடமிருந்து கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி பழனிவேல்ராஜன் செங்கோலைப் பெற்று, சுவாமி சந்நிதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து, அம்மனிடம் செங்கோலை மீண்டும் சமா்ப்பித்தாா். இதன்படி, சித்திரை மாதம் முதல் ஆவணி மாதம் வரை நான்கு மாதங்கள் மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்.
பட்டாபிஷேக விழாவில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வெள்ளி சிம்மாசனத்தில் வீதியுலா:
மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசன வாகனத்தில் வெள்ளி செங்கோலுடன் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் திருவீதியுலா வந்தாா். மீனாட்சி அம்மனைத் தொடா்ந்து, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் வீதியுலா வந்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இன்று திக்கு விஜயம்:
மதுரையின் அரசியாக பொறுப்பேற்ற மீனாட்சி அம்மன் இந்திர விமானத்தில் திக்கு விஜயம் செய்து, அஷ்ட திக்கு பாலகா்களை வென்ற ஐதீக நிகழ்வு திங்கள்கிழமை(ஏப். 27) இரவு நடைபெறும்.