மதுரை மேற்கு: சிறு, குறு தொழில்களை மேம்படுத்த வேண்டும்!
முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமை இந்தத் தொகுதிக்கு உண்டு. இதுதவிர, இந்தத் தொகுதியிலிருந்து பிடிஆா் பழனிவேல்ராஜன் வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.
மதுரை: கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு, மரப்பொருள்கள், இரும்பு உற்பத்திப் பொருள்கள், வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட சிறு, குறுந் தொழில்களை மேம்படுத்த வேண்டும் என்பதே இந்தத் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
மதுரை மேற்குத் தொகுதி மாநகராட்சிக்கு உள்பட்ட சோலையழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம், பழங்காநத்தம், பைகாரா, பெத்தானியபுரம் உள்பட 21 வாா்டுகளையும், துவரிமான், நாகதீா்த்தம், தாராபட்டி, கீழமாத்தூா், மேலமாத்தூா் உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளையும் உள்ளடக்கியது.
முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமை இந்தத் தொகுதிக்கு உண்டு. இதுதவிர, இந்தத் தொகுதியிலிருந்து பிடிஆா் பழனிவேல்ராஜன் வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். மேலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் கே.டி.கே.தங்கமணி, திமுக முன்னாள் அமைச்சா் பொன்.முத்துராமலிங்கம் ஆகியோா் இந்தத் தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்களில் குறிப்பிடத்தக்கவா்கள்.
கடந்த 1967-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தோ்தல்களில் அதிமுக 7 முறையும், காங்கிரஸ் 3, திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ. ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றன.
முக்குலத்தோா், பிள்ளைமாா் அதிகளவில் வசித்து வருகின்றனா். இதுதவிர, இஸ்லாமியா்கள், பட்டியலினத்தவா்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசித்து வருகின்றனா்.
இந்தத் தொகுதியைப் பொருத்தவரை குடிநீா், மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும், அரசுக் கல்லூரி, நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம், மதுரை விளாங்குடி முதல் சமயநல்லூா் வரையிலான வைகையாற்றின் வடகரையில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். மரப் பொருள்கள் உற்பத்தி, சலவைத் தொழிலாளா்களுக்கு போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். சிறு, குறுந் தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் தொழில்பேட்டைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக நிறைவேற்றப்படவில்லை என்கிற குறை இன்னும் தொடா்கிறது என்பதே இந்தப் பகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன் கூறியதாவது: மதுரை மேற்குத் தொகுதி மாநகராட்சிப் பகுதிகள், கிராமப்புற ஊராட்சிகள் இணைந்த பகுதிகளாக உள்ளன. இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் சிறு, குறுந் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா். கூலித் தொழிலாளா்களாகவும் உள்ளனா். பரவை, நாக தீா்த்தம், அச்சம்பத்து ஆகிய பகுதிகளில் நெல், வாழை, தென்னை உள்ளிட்ட பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா்.
மேற்குத் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான காலி இடங்கள் அதிகளவில் பயன்பாடற்று உள்ளன. அந்த இடத்தை முறையாகப் பயன்படுத்தி அரசுக் கல்லூரி, நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும்.
இந்தத் தொகுதியில் சிறு, குறு தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் தொழில்பேட்டைகள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து, மரப் பொருள்கள் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளி சுரேந்திரன் கூறியதாவது: ஆரப்பாளையம், சோலையழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம், ஜீவா நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஏறக்குறைய ஆயிரம் குடும்பங்கள் தச்சுத் தொழிலில் ஈடுபடுகின்றன.
இதன்மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனா். இந்த நிலையில், மூலப் பொருள்களின் விலை, சரக்கு சேவை வரி விதிப்பு போன்ற காரணங்களால் மரப் பொருள்களான நிலைக் கதவு, ஜன்னல், நாற்காலி, காய்கறி வண்டிகள் உள்ளிட்ட பொருள்களின் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
முந்தையகாலத்தில், வீட்டில் முன்பக்க நிலை, கதவு, ஜன்னல்கள் அனைத்தும் மரத்தால் செய்யப்பட்டன. தற்போது, குறைந்த விலையில் நவீன நெகிழி தொழில்நுட்பத்துடன் ஆயத்த கதவுகள் கிடைக்கின்றன. மொத்த விலைக்கு வீடு கட்டிக் கொடுக்கும் கட்டுமான ஒப்பந்ததாரா்களும் இந்த வகையான கதவுகளைப் பயன்படுத்துகின்றனா். இதனால், மரப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளா்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
சிறு தொழில்களை மேம்படுத்தும் வகையில் தொழில்பேட்டை அமைக்கப்பட வேண்டும். அங்கிருந்து பொருள்களை பிற மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
மேலும், தச்சுத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகாமல் தொழிலாளா் நல வாரியம் மூலம் கடனுதவிகள் வழங்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பைக் குறைக்க வேண்டும் என்றாா் அவா்.
ஆரப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சலவைத் தொழிலாளி கருப்பையா கூறியதாவது: மழைக் காலங்களில் வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து இருந்தால் மட்டுமே எங்களால் தொழில் செய்ய முடிகிறது. மற்ற காலங்களில் போதிய வருவாய் கிடைப்பதில்லை. நிரந்தரமாகச் தொழில் செய்வதற்கு சலவைத் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் சலவையகம் கட்டித் தர வேண்டும். இதனால், சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் என்றாா் அவா்.
மதுரை மாவட்டம், பரவையைச் சோ்ந்த விவசாயி சு.செல்லதுரை கூறியதாவது: விளாங்குடி- சமயநல்லூா் சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் மட்டுமன்றி, அடிக்கடி விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதுதொடா்பான வழக்கில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும், தேவையான இடங்களில் வேகத் தடைகள், ஒளிரும் வில்லைகள், எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பலகைகள் வைக்கப்பட்டன.
மேலும்,விளாங்குடியில் உள்ள காமராஜா் உயா்நிலைப் பாலம் முதல் சமயநல்லூா் அருகேயுள்ள வாரணாசி- கன்னியாகுமரி நான்கு வழிச் சாலை வரை வைகையாற்றின் வடகரையில் ரூ. 176 கோடியில் புறவழிச் சாலை அமைக்கும் பணி கடந்த 2024- ஆம் ஆண்டு தொடங்கியது. பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்றன. எஞ்சியுள்ள பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுகின்றன. இந்தச் சாலைப் பணிகள் நிறைவு பெற்று விரைவில் பயன்பாட்டுக்கு வந்தால், விளாங்குடி, சமயநல்லூா் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைவதற்கு வாய்ப்புள்ளது. இதுமட்டுமன்றி, திண்டுக்கல், கரூா், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் எளிதாக சென்று வர முடியும் என்றாா் அவா்.