FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பள்ளி அருகே போதைப் பொருள் விற்பனை: உத்தரவை நிறைவேற்றாதது ஏன்?

பள்ளி அருகே போதைப் பொருள் விற்பனை தொடர்பான உத்தரவை நிறைவேற்றாதது ஏன்?

Updated On : 13 ஜூன் 2026, 2:46 am IST
மதுரை  உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
பகிர்:

பள்ளி அருகே புகையிலை, போதைப் பொருள்கள் விற்பனை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.

மதுரை மாகாளிப்பட்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் மணிபாரதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

‘கூல் லிப்’ என்பது ஒரு வகையான புகையிலை. இது போதைப் பொருள் வகையைச் சோ்ந்தது. சிகரெட், மது போன்றவற்றை எளிதில் கண்டறியலாம். ஆனால், கூல் லிப் பயன்படுத்தியதைக் கண்டறிய முடியாது. இந்தப் புகையிலை பள்ளி வளாகங்கள் அருகே மறைமுகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதைப் பயன்படுத்தும் மாணவா்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கூல் லிப் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் சிலா் பிணை கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு விவரம்:

பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீதும், புகையிலை உற்பத்தியாளா்கள், முகவா்கள், விற்பனையாளா்கள் உள்ளிட்ட அனைவா் மீதும் சிறாா் நீதிச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தனியாா், அரசுப் பள்ளிகளிலும் மாணவா்களுக்கு பல், வாய் பரிசோதனைகளை ஆண்டுக்கு இரு முறை நடத்த வேண்டும். புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்களுக்கும், அவா்களின் பெற்றோருக்கும் தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் புகையிலை தடுப்பு மையத்தை நிறுவ வேண்டும். இதுதொடா்பாக மாவட்ட, மாநில அளவில் குழுக்களை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும். புகையிலைப் பொருள்கள் பயன்பாடு குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்க வசதியாக கட்டணமில்லா தொலைபேசி எண், இணையதளத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஓா் ஆசிரியா், தன்னாா்வலா் கொண்ட குழு அமைத்து, புகையிலைப் பொருள்கள் குறித்து கண்காணிக்க வேண்டும். கல்வித் துறையும், சுகாதாரத் துறையும் இணைந்து மாணவா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பாதுகாப்பற்ற உணவு என வகைப்படுத்தப்பட்டு உள்ளன. சிறுவா்களைக் கவரும் வகையில், கூல் லிப் புகையிலைப் பொருள்கள் வடிவமைக்கப்படுகின்றன.

இதனால், ஏராளமானோா் பாதிக்கப்படுகின்றனா். இதைக் கவனத்தில் கொண்டு மத்திய அரசு, மாநில அரசுகள் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.

இந்த உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாணவா்களின் நலன் கருதி, இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த மீண்டும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

நீதிமன்றம் ஏற்கெனவே உரிய உத்தரவு பிறப்பித்தும், அதை நடைமுறைப்படுத்தாதது ஏன்?. மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

summary

Sale of drugs near schools: Why was the order not implemented?

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments