திண்டுக்கல்லில் முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஆறாயிரத்து ஐநூறு பேருக்கு நிலுவையில் உள்ள உதவித் தொகையினை உடனடியாக வழங்கக் கோரி முறைசாரா தொழிலாளர்கள்
ஆறாயிரத்து ஐநூறு பேருக்கு நிலுவையில் உள்ள உதவித் தொகையினை உடனடியாக வழங்கக் கோரி முறைசாரா தொழிலாளர்கள் (சிஐடியு) சார்பில் திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தின் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முத்துராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கே.பிரபாகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் விபத்து எங்கு நடந்து இறந்தாலும் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஓய்வூதிய தொகையை ரூ.4 ஆயிரமாக உயர்த்த வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மகப்பேறு உதவித் தொகையை விரைவாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொழிலாளர் நல வாரிய சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் ஸ்ரீதரை சந்தித்து, கோரிக்கை மனுவினை அளித்தனர். அப்போது சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.ஆர்.கணேசன், 1500 தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியம், 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கான மகப்பேறு உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல் கல்வி உதவித் தொகையும் 4500 பேருக்கு கிடைக்கவில்லை எனக் கூறினார். அதற்கு பதில் அளித்த ஆய்வாளர் ஸ்ரீதர், நான் பதவி ஏற்றது முதல் அனைவருக்கும் காலதாதமின்றி உதவித் தொகை அளித்து வருகிறேன். அதற்கு முன்பு நிலுவையில் இருந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றார். ஆனால், அந்த மனுக்களை ஆய்வு செய்து தகுதியிருந்தால் உதவித் தொகை வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
பழனி: பழனியில் இந்திய தொழிற்சங்கத்தினர் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழனி வையாபுரி கண்மாய் புறவழிச்சாலை ரவுண்டானா முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட பொருளாளர் மனோகரன் தலைமை வகித்தார். அப்போது, அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் விபத்து மரண நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். இயற்கை மரண நிவாரணமாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். பெண்களுக்கு மகப்பேறு தொகையான ரூ.18 ஆயிரத்தை ஒரே தவணையில் வழங்க வேண்டும். மாத ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரத்தை நிலுவை தொகையுடன் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்கள் பிச்சைமுத்து, மோகனா, ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.