மழையால் சாய்ந்த ஆலமரத்தை வெட்டிக் கடத்த முயற்சி: பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சரிந்து விழுந்த நிலையில்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சரிந்து விழுந்த நிலையில், மர்ம நபர்கள் அந்த மரத்தை வெட்டிக் கடத்த முயன்றதை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
வத்தலகுண்டு அடுத்துள்ள சின்னுப்பட்டி கிராமத்தில், மருதாநதி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதேபகுதியில் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரத்துடன், கன்னிமார் கோயில் மற்றும் முனியப்பன் கோயில் அமைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 25 நாள்களுக்கு முன்பு அந்த ஆலமரத்தில் தீப்பற்றி எரிவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, வத்தலகுண்டு தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தனர்.
இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு அந்த ஆலமரம் மழையினால் வேரோடு சாய்ந்தது. இதைத் தொடர்ந்து மர்ம நபர்கள், சிலர் அம் மரத்தை வெட்டி கடத்த முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சின்னுப்பட்டி இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி அந்தோணி விவேக் தலைமையில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திரண்டனர். மருதாநதி தடுப்பணை அருகே சென்றபோது, விழுந்து கிடந்த ஆலமரம் வெட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறியது:
இந்த ஆலமரம் ஏலம் விடுவதற்காக வைக்கப்பட்டிருந்து. அதற்குள்ளாக மரத்தை யார் வெட்டினர் என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.