சம ஊதியம் வழங்கக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் 4 ஆயிரம் பேருக்கு
தமிழகத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் 4 ஆயிரம் பேருக்கு சம ஊதியம் வழங்கக்கோரி திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் கே.கலா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சம ஊதியம் கேட்டு மனு அளித்துள்ள 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மீது பழி வாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். செவிலியர்களுக்கு பேண்ட், ஷர்ட் சீருடைக்கு மாற்றாக சுடிதார் வழங்க வேண்டும். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 600-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியிட மாறுதல் பெற்றுள்ள நிலையில், உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணியமர்த்தப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர் கலைச்செல்வி, பொருளாளர் அருள்மேரி, துணைத் தலைவர் சித்ரா உள்பட 30-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.