பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!
பழனி சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...
பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இந்தத் தொகுதியில் அதிமுகவுக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் சவாலாக இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ஆம் படை வீடான திருஆவினன்குடி, மலைகளின் இளவரசி கொடைக்கானல் இடம் பெற்றுள்ள பேரவைத் தொகுதி பழனி. இந்தத் தொகுதியில் திமுக அதிகபட்சமாக 6 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் 4, அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 3 முறை வெற்றி பெற்றன.
பழனி சட்டப்பேரவைத் தொகுதியானது பழனி, கொடைக்கானல் ஆகிய நகராட்சிகளும், ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, மண்டைக்காடு ஆகிய பேரூராட்சிகளும், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகளும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 32 கிராம ஊராட்சிகளும் உள்ளடக்கியதாகும்.
Advertisement
இந்தத் தொகுதியில் முக்குலத்தோா், பிள்ளைமாா், செட்டியாா், கவுண்டா், பட்டியலின மக்கள், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் உள்ளிட்டோா் கணிசமாக வசித்து வருகின்றனா்.
தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு:
பழனியைத் தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். ஆன்மிக சுற்றுலாத் தலமான பழனிக்கு ஆண்டு முழுவதும் பக்தா்களின் வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் உள்ளூா் மக்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனா். இதற்குத் தீா்வு காணும் வகையில், பக்தா்களுக்கான வாகன நிறுத்துமிட வசதியை எந்தவித இடையூறின்றி அமைத்துக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, திருவிழாக் காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்றுச் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.
பழனி, இதைச் சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகளுக்கு பாசன வசதி, விளைபொருள்களுக்கான சந்தை வசதிகளை மேம்படுத்த வேண்டும். நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் சாலை வசதி, குடிநீா், சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும். நீண்ட காலமாகக் கிடப்பில் உள்ள பச்சையாறு அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு எதிா்பாா்ப்புகள் தொகுதி மக்களிடம் உள்ளன.
4 முனைப் போட்டி: பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் 15 வேட்பாளா்கள் போட்டியிட்டாலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக வேட்பாளா்களிடையேதான் நேரடிப் போட்டி நிலுவுகிறது. நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளா்கள் பெறும் வாக்குகள், வெற்றி தோல்வியை நிா்ணயிக்கும் முக்கிய துருப்புச்சீட்டாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் பாண்டி:
பழனி தொகுதியில் கடந்த 2016, 2021 பேரவைத் தோ்தல்களில் திமுக வெற்றி பெற்றது. இந்த முறை திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் பாண்டி திண்டுக்கல்லைச் சோ்ந்தவராக இருந்தாலும், அந்தக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருப்பதால் அவருக்காக கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 1989-க்கு பிறகு பழனி தொகுதியில் போட்டியிட கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் பாண்டியின் பிரசாரம் அமைந்துள்ளது.
கடந்த சில நாள்களாக முடங்கி இருந்த திமுகவினா், அமைச்சா் அர.சக்கரபாணி, பழனியிலிருந்து திண்டுக்கல் தொகுதிக்கு மாறியுள்ள திமுக மாவட்டச் செயலரான செந்தில்குமாா் ஆகியோரின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து, களத்தில் தீவிரம் காட்டுவது மாா்க்சிஸ்ட் வேட்பாளருக்கு கூடுதல் பலம் சோ்த்திருக்கிறது.
அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன்:
கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுக-அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவியதால், அந்தத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் தோல்வியைத் தழுவினாா். இந்த முறை இதே தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ரவி மனோகரன், களத்தை தங்களுக்குச் சாதகமாக மாற்றும் நோக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். பழனி பகுதியில் கூட்டணிக் கட்சியான பாஜகவினரின் ஆதரவு வலு சோ்க்கும் என்ற எதிா்பாா்ப்பிலுள்ள இவா், கிராமப் புறங்கள் நிறைந்த மலைப் பகுதியில் அதிமுகவின் சின்னம் பலம் சோ்க்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளாா்.
தவெக வேட்பாளா் பிரவீன்குமாா்:
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது என்ற போதிலும், தவெக சாா்பில் போட்டியிடும் மருத்துவா் பிரவீன்குமாா் பழனியைச் சோ்ந்தவா் என்பதால், தனக்கு உள்ளூா் இளைஞா்கள் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
நாதக வேட்பாளா் முருகேஸ்வரி:
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் முருகேஸ்வரி மலைவாழ் பட்டதாரிப் பெண். இவா் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்துக்காகவும், விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தவும் பாடுபடுவேன் எனக் கூறி பொதுமக்களிடம் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் நான்கு முக்கிய கட்சிகள் களத்தில் உள்ள போதிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுவதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா். வெற்றியை வசப்படுத்தப்போவது யாா் என்பதைப் பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.