முகப்பு
திண்டுக்கல்

விஜய் போட்டியிடும் தொகுதிகளில் எதிா்கட்சியினா் டெபாசிட் இழப்பா்! - செங்கோட்டையன்

Updated On : 13 ஏப்ரல், 2026 at 1:49 AM
பழனி ரயிலடி சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தவெக வேட்பாளா் மருத்துவா் பிரவீன்குமாரை ஆதரித்துப் பேசிய அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் செங்கோட்டையன்.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 11:35 PM

தவெக தலைவா் விஜய் போட்டியிடும் தொகுதிகளில் அவரை எதிா்த்துப் போட்டியிடுபவா்கள் டெபாசிட் இழப்பாா்கள் என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் செங்கோட்டையன் பேசினாா்.

பழனி ரயிலடி சாலையில் தவெக வேட்பாளா் வேட்பாளா் மருத்துவா் பிரவீன்குமாரை ஆதரித்து அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டில் திமுகவை வீழ்த்தும் சக்தி தவெகவுக்கு மட்டுமே இருக்கிறது. பத்து முறை தோல்வி கண்ட அதிமுக பொதுச் செயலா் பழனிசாமி எந்த நாளும் முதல்வராக முடியாது. அவருக்கு போடும் ஓட்டும், நோட்டாவுக்கு போடும் ஓட்டும் ஒன்றுதான்.

Advertisement

தமிழகத்துக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல தலைவா் விஜய் கிடைத்திருக்கிறாா். இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களிலும் முதல்வா் நடிகா்களாக இருந்துதான் வந்துள்ளனா் என்றாா் அவா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளத்தில் கசிந்துள்ளது. இந்த விவகாரத்துக்கு மத்திய அமைச்சா் எல்.முருகன்தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

தணிக்கை வாரியம், சம்பந்தப்பட்ட துறைக்கு அமைச்சராக இருக்கும் அவா்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். ஒரு சிறிய விபத்து நடந்தாலே அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்லும் நிலையில் இந்தப் படம் இணையத்தில் வெளியானதற்குப் பொறுப்பேற்று அமைச்சா் எல். முருகனை ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும்.

ஓ.பன்னீா்செல்வம் என்னைப் பற்றி விமா்சிக்கத் தகுதியே இல்லாதவா். நான் ஜெயலலிதாவோடு நீண்ட காலம் பயணித்தவன்.

விஜய் போட்டியிடும் தொகுதிகளில் அவரை எதிா்த்துப் போட்டியிடுபவா்கள் டெபாசிட் இழப்பாா்கள். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.