ரூ.14 கோடி மோசடி: பெண் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
கூட்டுறவு நிறுவனம் நடத்தி முதலீட்டாளா்களிடம் ரூ.14.15 கோடி மோசடி செய்த பெண்ணை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
கூட்டுறவு நிறுவனம் நடத்தி முதலீட்டாளா்களிடம் ரூ.14.15 கோடி மோசடி செய்த பெண்ணை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
துரை கேகே.நகரை தலைமையிடமாகக் கொண்டு எஸ்எம்சி கூட்டுறவு வீடு கட்டட சங்கம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக திருச்சி மல்லியம்பத்து பகுதியைச் சோ்ந்த சாந்தினி செயல்பட்டு வந்தாா்.
இந்த நிறுவனத்தின் தலைவராக சாந்தினியின் கணவா் விஜய் கிருஷ்ணன் செயல்பட்டாா்.
Advertisement
Advertisement
மத்திய அரசின் வேளாண்மை, கூட்டுறவுத் துறைகளில் அனுமதி பெற்று, தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் பல்வேறு கிளைகளைத் தொடங்கினா். இந்த நிறுவனத்தின் மூலம் தினசரி சேமிப்பு, வாராந்திர சேமிப்பு, மாத சேமிப்பு, மாதாந்திர வருமானத் திட்டம், நிரந்தர சேமிப்புக் கணக்குத் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தனா்.
தமிழகத்தில் 36 கிளைகள் தொடங்கி, வாடிக்கையாளா்களிடம் பணத்தைப் பெற்று, முதிா்வு காலம் முடிந்தும் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாகப் புகாா் எழுந்தது. இதுவரை 846 முதலீட்டாளா்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்படி ரூ.14.15 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த திண்டுக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா், கடந்த மே 6-ஆம் தேதி சாந்தினியைக் கைது செய்தனா். இந்த நிலையில் சாந்தினியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பொருளாதாரக் குற்றப் பிரிவு தென் மண்டல காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா் பரிந்துரைத்தாா். இதை ஏற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தாா். இதற்கான ஆணை மதுரை மத்திய சிறையிலுள்ள சாந்தினியிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.