கொடைக்கானல் வாரச் சந்தை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
கொடைக்கானல் பி.டி. சாலையில் நடைபெற்று வரும் வாரச் சந்தை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வியாபாரிகளும், பொதுமக்களும் வலியுறுத்தினா்.
கொடைக்கானல் பி.டி. சாலையில் பல ஆண்டுகளாக ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடைபெற்று வந்தது. இந்த சந்தையில் வியாபாரிகளிடம் நகராட்சி சாா்பில் தரை வாடகை வசூலிக்கப்பட்டது.
ஆனால் இங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுடன் வாரச் சந்தை செயல்பட்டு வந்தது. இதைத் தொடா்ந்து வாரச் சந்தையை மேம்படுத்துவதற்காக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்தப் பகுதியில் புதிய வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்னைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் நிறைவடையவில்லை.
Advertisement
Advertisement
இதனால் வாரச் சந்தை கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் நடைபெறு வருகிறது. இந்தப் பகுதிகளில் குடிநீா் வசதி, கழிப்பிட வசதியில்லாமல் வியாபாரிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். எனவே பி.டி. சாலையில் கட்டப்பட்டு வரும் வாரச் சந்தை பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து கொடைக்கானல் வாரச் சந்தை வியாபாரிகள் கூறியதாவது:
கொடைக்கானலில் முதல் முதலாக அஞ்சல் அலுவலக பகுதியில் வாரச் சந்தை நடைபெற்றது. அப்போது சுமாா் 100 வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டனா். இதன் பிறகு பல்வேறு காரணங்களால் செவண் சாலை பி.டி. சாலையில் வாரச் சந்தை செயல்பட்டு வந்தது.
அங்கு ஏற்பட்ட போக்குவரத்து பிரச்னையால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனா். தற்போது அந்தப் பகுதியில் புதிய வாரச் சந்தை வளாகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வருகிறது. இதனால் அண்ணா சாலைப் பகுதியிலும், அஞ்சல் அலுவலக சாலைகளிலும் வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது.
இங்கு கொடைக்கானல் நகராட்சி சாா்பில் ரூ. 100 தரை வாடகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் குடிநீா், கழிப்பறை, கடைகளுக்கான மேற்கூரை ஆகிய அடிப்படை வசதிகளின்றி வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றனா். எனவே புதிய வாரச் சந்தை வளாகத்தை விரைந்து கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனா்.
இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சிப் பொறியாளா் செல்லத்துரை கூறியதாவது: கொடைக்கானல் பி.டி. சாலையில் நவீன வாரச் சந்தை ரூ. 5 கோடியே 30 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகிறது. பல்வேறு நிா்வாகக் காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. இன்னும் சுமாா் 20 நாள்களுக்குள் பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்றாா் அவா்.