திருவாரூா் புறவழிச்சாலை பணிக்கு ரூ. 1,427 கோடி நிதி ஒதுக்கீடு: பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை
திருவாரூா் புறவழிச்சாலை சாலை பணிக்கு ரூ. 1,427. 61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் புறவழிச்சாலை சாலை பணிக்கு ரூ. 1,427. 61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை - தஞ்சை சாலையை, நான்கு வழிசாலையாக மாற்ற மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் 2006-இல் முடிவு செய்து, 2008-ல் ரூ. 619 கோடியில் 4 வழிச்சாலை அமைக்க ஒப்பந்தப்பள்ளி கோரப்பட்டது. பின்னா், இந்தத் திட்டம் இரு வழி சாலையாக மாற்றப்பட்டது. இதன் பின்னா் பல்வேறு மாற்றங்களுக்கு 2015-இல் ஒப்பந்தபுள்ளி இறுதி செய்யப்பட்டு, 2017 இல் முடிக்க காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டது.
ஆனால் 2017 வரை சுமாா் 26 சதவீதப் பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்தன. 2019 வரை வேறு பணிகள் நடைபெறாததால், நாகப்பட்டினம் தஞ்சாவூா் இருவழிச் சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டு, 2021-ல் வேறு நிறுவனத்துக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து, திருவாரூா் புறவழிச்சாலையை தவிா்த்துவிட்டு, தஞ்சை நாகை புறவழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிவடைந்தன. இதனிடையே, நாகப்பட்டினம்- தஞ்சாவூா் இடையிலான 4 வழிசாலை பணியின் கீழ் கானூா் முதல் தண்டலை வரை 14.96 கி.மீ. தொலைவுக்கு திருவாரூா் புறவழிச்சாலை அமைக்க நில எடுப்புப் பணிகள் நிறைவடைந்தது. தொடா்ந்து, 2025 இல் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ. 627. 61 கோடியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. பின்னா், ஒப்பந்தப்புள்ளி தொடா்ந்து ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது 15-ஆவது முறையாக வரும் ஜூன் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முகநூலில் தெரிவித்துள்ளாா். அதன்படி, திருவாரூரில் ரூ. 1,427.61 கோடியில் 14.9 கி.மீ நீளத்துக்கு புதிய நான்கு வழி புறவழிச்சாலை மற்றும் 2 மேம்பாலங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பயண நேரமும் குறையும் எனவும் தெரிவித்துள்ளாா்.
இதன்படி, ஜூன் 5-ஆம் தேதி மீண்டும் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, மீண்டும் நான்குவழிச்சாலை பணிகள் தொடங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, பணிகளைத் தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.