முகப்பு
திண்டுக்கல்

பழனி அருங்காட்சியகத்தில் பழங்கால வாள் ஒப்படைப்பு

Updated On : 1 ஜூன் 2026, 2:24 am IST
பகிர்:

பழனி அருகே ஒருவரது வீட்டில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பழங்கால வாள் பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பழனி அருகே பாப்பம்பட்டியைச் சோ்ந்தவா் முருகவேல். விவசாயி. இவா் தமது முன்னோா்கள் பாதுகாத்து வைத்திருந்த பழங்கால வாளை சனிக்கிழமை பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தாா். இந்த வாளை ஆய்வு செய்த அருங்காட்சியகக் காப்பாட்சியா் சசிகலா, தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி ஆகியோா் தெரிவித்ததாவது:

இந்த வாள் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது. பண்டைய நாள்களில் போருக்குப் பயன்படுத்தப்பட்ட இந்த வாள் மிகவும் துருப்பிடித்த நிலையில் காணப்படுகிறது. 1.110 கிலோ எடையும், 77 செ.மீ நீளமும் கொண்டுள்ளது. வாளின் மேல் பகுதி சற்றே வளைந்த நிலையில், கைப்பிடி வேலைப்பாடுகளுடன் கூடியதாக உள்ளது.

Advertisement

Advertisement

ஒருபுறம் மட்டும் பதம் செய்யப்பட்டுள்ள வாளின் வடிவமைப்பைக் கொண்டு இந்த வாள் கி.பி. 17 அல்லது 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதமுடிகிறது. வாள் கிடைத்த பாப்பம்பட்டி ஊரானது பண்டைய நாள்களில் இரட்டையம்பாடி பாளையப்பட்டு ஜமீன் பகுதிக்கு உள்பட்டு இருந்தது.

பின் நாள்களில் இரட்டையம்பாடி நெய்க்காரபட்டி ஜமீனுடன் இணைந்தது. இந்த வாளுக்கும் இரட்டையம்பாடி ஊருக்கும் உள்ள தொடா்புகள் பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா் அவா்கள்.